IND vs NEP, Asia Cup 2023: புதிய சாதனை படைத்த விராட் கோலி; ரசிகர்கள் விமர்சனம்!

Updated: Mon, Sep 04 2023 19:56 IST
IND vs NEP, Asia Cup 2023: புதிய சாதனை படைத்த விராட் கோலி; ரசிகர்கள் விமர்சனம்! (Image Source: Google)

இந்தியா மற்றும் நேபாள் அணிகளுக்கு இடையேயான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது போட்டியானது பல்லகலே மைதானத்தில் இன்று  நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியானது முதலில் பத்து வீசுவதாக தீர்மானம் செய்தது. கடந்த போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் ரோஹித் பேட்டிங்கை தேர்வு செய்தது விமர்சனத்தை ஏற்படுத்தியிருந்த வேளையில் இன்று அவர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனைத்தொடர்ந்து முதலில் விளையாடி முடித்துள்ள நேபாள் அணி 48.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 230 ரன்களை குவித்துள்ளது. இதையடுத்து 231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கினை எதிர்த்து இந்திய அணி பேட்டிங் செய்ய தயாராகி வருகிறது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணியின் முன்னணி வீரர்களான விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் ஆகிய நட்சத்திர வீரர்கள் போட்டியின் தொடக்கத்திலேயே அடுத்தடுத்து கைக்கு வந்த எளிதான கேட்ச்களை தவறவிட்டது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏனெனில் ஐந்து ஓவர்களுக்கு உள்ளாகவே மூன்று எளிய கேட்ச்களை இந்திய அணி வீரர்கள் தவறவிட்டதால் நேபாள் அணி முதல் விக்கெட்டுக்கு 65 ரன்கள் சேர்த்து அசத்தியது. ஒருவேளை ஆரம்பத்திலேயே கேட்ச்கள் பிடிக்கப்பட்டிருந்தால் நேபாள் அணியை எப்போதோ சுருட்டியிருக்கலாம் என்பதே அனைவரது கருத்தாகவும் உள்ளது.

அதிலும் குறிப்பாக இந்திய வீரர்களில் அதிக கேட்ச்களை பிடித்த வீரர் என்ற பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கும் விராட் கோலி இதுவரை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 143 கேட்ச்களை பிடித்து சாதனை படைத்திருக்கும் வேளையில் அவரே இன்றைய போட்டியில் எளிதான ஒரு கேட்சை தவறவிட்டது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

 

குறிப்பாக ஆசிப் ஷேக் என்கிற நேபாள் அணியின் துவக்க வீரரின் கேட்சை 1 ரன் இருக்கும் போது விராட் கோலி தவறவிட்டார். அதனை சரியாக பயன்படுத்திய ஆசிப் ஷேக் 58 ரன்கள் குவித்து மறுபடியும் விராட் கோலியிடமே கேட்ச்சாகி வெளியேறினார். இதன்மூலம் பல அணிகள் விளையாடும் தொடர்களில் தனது 100ஆவது கேட்சையும் பிடித்துள்ள விராட் கோலி, முகமது அசாரூதினுக்கு பின் இச்சாதனையை செய்யும் இரண்டாவது வீரர் எனும் பெருமையையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை