ஐசிசி தரவரிசையில் புதிய மகுடம் சூடியா ரோஹித் சர்மா!
இந்திய அணி தற்சமயம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து தற்சமயம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. இதையடுத்து, ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான டி20 தொடரானது தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒருநாள் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதில் பேட்டர்களுக்கான தவரிசையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரோஹித் சர்மா இரண்டு இடங்கள் முன்னேறி முதலிடத்தைப் பிடித்துள்ளார். இதன் மூலம் ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் ரோஹித் சர்மா முதல் முறையாக நம்பர் 1 இடத்தைப் பிடித்துள்ளதுடன், முதலிடத்தைப் பிடித்த மிகவும் அதிக வயதுடைய வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் ஒரு அரைசதம், ஒரு சதத்தை விளாசிய ரோஹித் சர்மா, தொடர் நாயகன் விருதையும் வென்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுதவிர இரண்டாம் இடத்தில் ஆஃப்கானிஸ்தானின் இப்ராஹிம் ஸத்ரான் நீடிக்கும் நிலையில், ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் சோபிக்க தவறியதன் காரணமாக முதலிடத்தில் இருந்த ஷுப்மன் கில் இரண்டு இடங்கள் பின் தங்கியதுடன் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
மேற்கொண்டு இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி 6ஆம் இடத்தையும், ஸ்ரேயாஸ் ஐயர் 9ஆம் இடத்தையும் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் ஆஃப்கானிஸ்தானின் ரஷித் கான் தொடர்ந்து முதலிடத்திலும், தென் ஆப்பிரிக்காவின் கேசவ் மஹாராஜ் இரண்டாம் இடத்திலும், நியூசிலாந்தின் மிட்செல் சாண்ட்னர் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.
Also Read: LIVE Cricket Score
இதில் இந்திய அணி வீரர்கள் குல்தீப் யாதவ் 7ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதுடன், இந்த பட்டியலின் டாப்-10 இடத்திற்குள் இருக்கும் ஒரே இந்திய பந்துவீச்சாளராகவும் உள்ளார். அதேசமயம் இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா இரண்டு இடங்கள் பின் தங்கியுள்ளதுடன் 13ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசையில் ஆஃப்கானிஸ்தானின் அஸ்மதுல்லா ஒமர்ஸாய் முதலிடத்தில் தொடர்கிறார்.