ஆஸ்திரேலியா- இந்தியா இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி சிட்னியில் இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 46.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 236 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக மேத்யூ ரென்ஷா 56 ரன்களையும், மிட்செல் மார்ஷ் 41 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் ஹர்ஷித் ரானா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

Advertisement

அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. 237 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் ரோஹித் சர்மா சதம் விளாசியதுடன் 121 ரன்களையும், விராட் கோலி 74 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இருப்பினும் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை வென்றது.

Advertisement

ரோஹித் சர்மா சாதனை

இந்த போட்டியில் ரோஹித் சர்மா சதம் விளாசியதன் மூலம், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 33ஆவது சதத்தைப் பூர்த்தி செய்தார். மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் இது அவரது 50ஆவது சதமாகவும் அமைந்தது. இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 50 சதங்களை விளாசிய மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இதற்கு முன் சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி ஆகியோர் மட்டுமே இதனைச் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதுதவிர ஆஸ்திரேலியாவில் ஒருநாள் போட்டிகளில் 11 அரைசதங்களுக்கு மேல் ஸ்கோர் செய்துள்ள இந்திய வீரர்களின் பட்டியலில் ரோஹித் சர்மா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் 11 அரைசதங்களுக்கு மேல் ஸ்கோர் செய்து சச்சின் டெண்டுல்கரின் சாதனையை அவர் சமன் செய்தார். இந்த பட்டியலில் விராட் கோலி 12 அரைசதங்களுடன் முதலிடத்தில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

மேலும் ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டு பேட்ஸ்மேனாக அதிக ஒருநாள் சதங்களை அடித்த பேட்ஸ்மேன் என்ற பெருமையை ரோஹித் சர்மா பெற்றுள்ளார். ஆஸ்திரேலிய மண்ணில் 33 இன்னிங்ஸ்களில் அவர் 6 ஒருநாள் சதங்களை விளாசியுள்ளார். இந்த பட்டியலில் விராட் கோலி மற்றும் குமார் சங்கக்காரா ஆகியோர் தலா 5 சதங்களை விளாசி இரண்டாவது இடத்தில் உள்ளனர்.

Advertisement

அதேபோல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ரோஹித் அடித்த ஒன்பதாவது ஒருநாள் சதம் இதுவாகும், இதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் ஒரே அணிக்கு எதிராக அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு அவர் முன்னேறினார். இந்த பட்டியலில் வெஸ்ட் இண்டீஸூக்கு எதிராக விராட் கோலியும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சச்சின் டெண்டுல்கரும் தலா ஒன்பது ஒருநாள் சதங்களை விளாசி அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

விராட் கோலி சாதனை

ரோஹித்தை போலவே விராட் கோலியும் சிறப்பு சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதன்படி இப்போட்டியில் அவர் 74 ரன்கள் எடுத்ததன் மூலம், ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். இதற்கு முன்பாக, இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார் சங்ககாரா ஒருநாள் போட்டிகளில் 14234 ரன்கள் எடுத்து இரண்டாம் இடத்தில் இருந்த நிலையில், தற்சமயம் விராட் கோலி அதனை முறியடித்துள்ளார்.

Also Read: LIVE Cricket Score
Advertisement

இந்த தொடருக்கு முன்னதாக இந்திய ஒருநாள் அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோரது இடங்கள் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்திருந்தன. ஆனால் அதற்கெல்லாம் இன்றைய போட்டியின் மூலம் இருவரும் தங்கள் பதிலடியைக் கொடுத்துள்ளனர். இதன் மூலம் எதிர்வரும் 2027ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் இருவரும் விளையாடுவார்கள் என்ற நம்பிக்கையும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

About the Author

Tamil Editorial
Tamil Editorial Read More
Latest Cricket News