ஐபிஎல் 2022: கோபத்தில் கொந்தளித்த முத்தையா முரளிதரன்; வைரல் காணொளி!
ஐபிஎல் தொடரின் 40ஆவது லீக் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் பாண்டியா, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்தது. ஹைதராபாத் அணியில் அதிகபட்சமாக அபிசேக் சர்மா 65 ரன்களும், மார்க்ரம் 56 ரன்களும் எடுத்தனர்.
அதன்பின் 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்று கடின இலக்கை துரத்தி களமிறங்கிய குஜராத் அணிக்கு, விர்திமான் சஹா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 38 பந்துகளில் 68 ரன்கள் எடுத்து கொடுத்தாலும், விர்திமான் சஹா உள்பட குஜராத் அணியின் முதல் ஐந்து பேட்ஸ்மேன்களும் உம்ரான் மாலிக்கின் அசுரவேக பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினர். இதனால் குஜராத் அணியின் வெற்றிக்கு கடைசி 2 ஓவரில் 35 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது.
நடராஜன் வீசிய போட்டியின் 19ஆவது ஓவரில் குஜராத் அணி 13 ரன்கள் எடுத்ததால், கடைசி ஒரு ஓவருக்கு 22 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. களத்தில் இருந்த ராகுல் திவாட்டியா முதல் பந்தில் சிக்ஸர் அடித்துவிட்டு, இரண்டாவது பந்தில் ஒரு ரன் ஓடினார்.
ராகுல் திவேத்தியாவை அடிக்கவிடாமல் பார்த்து கொண்டால் வெற்றி பெற்றுவிடலாம் என ஹைதராபாத் வீரர்கள் தப்பு கணக்கு போட்ட நிலையில், மறுமுனையில் களத்தில் இருந்த ரசீத் கான் மூன்று மிரட்டல் சிக்ஸர்கள் விளாசியதன் மூலம், பரபரப்பான போட்டியில் கடைசி பந்தில் குஜராத் அணி மிரட்டல் வெற்றியை பதிவு செய்தது.
இந்நிலையில் கடைசி ஓவரை மார்கோ ஜென்சன் சரியாக வீசாததால் கடுப்பான முத்தையா முரளிதரன் வெறுப்பில் கண்டபடி கத்திய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.