இந்தியா vs இங்கிலாந்து நான்காவது டெஸ்ட் : பிட்ச் ரிப்போர்ட்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்க்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இதுவரை நடைபெற்ற மூன்று போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் 1 - 1 என்ற புள்ளிக்கணக்கில் சமநிலையில் உள்ளன.
அதிலும் ஹெட்டிங்லே மைதானத்தில் கடைசியாக நடைபெற்ற 3ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படு மோசமாக சொதப்பியது. இதனால் இந்திய அணி பதிலடி கொடுக்கவும், இங்கிலாந்து அணி வெற்றி பாதையை தொடரவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 4ஆவது டெஸ்ட் போட்டி வரும் செப்டம்பர் 2ஆம் தேதி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. வெற்றிக்காக இரு அணிகளும் தீவிர முணைப்புடன் இருப்பதால், போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
இந்நிலையில் ஓவல் மைதானத்தின் பிட்ச் ரிப்போர்ட் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த டெஸ்ட் தொடரில் முதல் 2 போட்டிகளிலும் முழுக்க முழுக்க வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக தான் பிட்ச் அமைந்திருந்தது. ஹெட்டிங்லேவில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டி முதலில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக அமைந்த சூழலில், பின்னர் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமானது.
ஆனால் 4ஆவது டெஸ்ட் போட்டியில் முற்றிலும் மாறுபட்டுள்ளது. அதாவது ஓவல் மைதானத்தின் பிட்ச்சானது சுழற்பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இரு அணிகளிலும் குறைந்தது 2 சுழற்பந்து வீச்சாளர்கள் களமிறக்க வாய்ப்புள்ளது.
லண்டனில் தற்போது நல்ல வெயில் அடித்து வருகிறது. ஒருவேளை மழைப்பொழிவு ஏற்பட்டால் மட்டுமே வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக பிட்ச் மாறுபடும். ஆனால் வானிலை அறிக்கையும் போட்டி நடைபெறும் ஐந்து நாள்களும் மழை பெய்வதற்கான வாய்ப்பு குறைவு என்று தெரிவித்துள்ளது. இதனால் இரு அணிகளும் நிச்சயம் சுழற்பந்துவீச்சாளர்களை பயன்படுத்தும் என்றே தெரிகிறது.
இங்கிலாந்து அணியை பொறுத்தவரை மொயின் அலி பேட்டிங், பந்துவீச்சு என நல்ல ஃபார்மில் உள்ளார். அதே போல பகுதி நேர பந்துவீச்சாளராக கேப்டன் ஜோ ரூட் இருப்பார். ஆனால் இந்திய அணியில் மீண்டும் அஸ்வின் களமிறக்கப்படலாம். தற்போது வரை 4 வேகப்பந்துவீச்சாளர்கள், மற்றும் ஒரே ஒரு ஸ்பின்னராக ஜடேஜா செயல்பட்டு வருகிறார்.
Also Read: சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!
ஆனால் ஜடேஜாவிற்கு சமீபத்தில் காயம் ஏற்பட்டதையடுத்து, நான்காவது டெஸ்ட் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாடுவது ஏறத்தாழ உறுதியாகியுள்ளது.