ஐபிஎல் 2022: ரஷித் கானை தக்கவைக்காதது ஏன்? - எஸ் ஆர் எச் விளக்கம்!
ஐபிஎல் தொடரில் எதிா்வரும் சீசனுக்கான ஏலம் நெருங்கி வரும் நிலையில், அணிகள் தக்க வைத்துக் கொண்ட வீரா்களின் பட்டியல் நேற்று வெளியானது.
இதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் கேன் வில்லியம்சன் (ரூ. 14 கோடி), அப்துல் சமத் (ரூ. 4 கோடி), உம்ரான் மாலிக் (ரூ. 4 கோடி) ஆகியோர் தக்கவைக்கப்பட்டுள்ளார்கள்.
அதேசமயம் டேவிட் வார்னர், ரஷித் கான், பேர்ஸ்டோ, மனிஷ் பாண்டே போன்ற பிரபல வீரர்களை சன்ரைசர்ஸ் அணி விடுவித்துள்ளது.
டி20 கிரிக்கெட்டின் மிகச்சிறந்த சுழற்பந்து வீச்சாளரான ரஷித் கான், சன்ரைசர்ஸ் அணியில் இடம்பெறாதது பற்றி அந்த அணியின் தலைமைச் செயல் அதிகாரி கே. ஷம்மி விளக்கமளித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “இது மிகவும் கடினமான முடிவு. ஆனால் சம்பளத்தை முன்வைத்து ஒரு வீரர் ஏலத்தில் இடம்பெற விருப்பப்படும்போது அந்த முடிவை நாங்கள் மதிக்க வேண்டும். ஏலத்தில் சரியான தொகைக்கு ரஷித் கானைத் தேர்வு செய்ய முயற்சி செய்வோம்” என்று தெரிவித்தார்.
முன்னதாக கடந்த 2017 இல் ரூ. 4 கோடிக்கும், 2018இல் ரூ. 9 கோடிக்கும் ரஷித் கானை சன்ரைசர்ஸ் அணி தேர்வு செய்தது. அந்த அணிக்காக 76 ஆட்டங்களில் விளையாடி 93 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.