மகளிர் உலகக்கோப்பை: நியூசிலாந்தை வீழ்த்தி இங்கிலாந்து த்ரில் வெற்றி!
மகளிர் உலகக்கோப்பை தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் அரையிறுதிச் சுற்றுக்கு ஆஸ்திரேலிய அணி முன்னேறியுள்ளது. மேலும் மீதமுள்ள அணிகள் அடுத்தடுத்த இடங்களுக்காக போட்டியிடுகின்றன.
இந்நிலையில் இன்று நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஹீத்தர் நைட் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இங்கிலாந்தின் சிறப்பான பந்துவீச்சால் நியூசிலாந்து அணியால் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்த முடியவில்லை.
மேடி க்ரீன் மட்டும் அரைசதம் அடித்து 52 ரன்கள் எடுத்தார். 48.5 ஓவர்களில் நியூசிலாந்து அணி 203 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
204 ரன்கள் என்ற வெற்றியுடன் களமிறங்கிய இங்கிலாந்துக்கு ஹீத்தர் நைட் மற்றும் நடாலியா ஸகைவர் நல்ல சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஸ்கைவர் அரைசதம் அடித்து 61 ரன்கள் எடுத்தார். 176 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்த இங்கிலாந்து 196 ரன்களுக்குள் 9 விக்கெட்டுகளை இழந்தது.
எனினும், டீன் மற்றும் ஷ்ரப்சோல் பொறுப்புடன் விளையாடி இங்கிலாந்து வெற்றியை உறுதி செய்தனர். 47.2 ஓவர்களில் இங்கிலாந்து அணி 204 ரன்கள் எடுத்து 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன்மூலம், அரையிறுதி வாய்ப்பை இங்கிலாந்து அணி தக்கவைத்துள்ளது. அதேசமயம் நியூசிலாந்து அணி தனது அரையிறுதி வாய்ப்பை ஏறத்தாழ இழந்துள்ளது.