ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் அக்டோபர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இத்தொடரில் பங்கேற்கும் அணி தற்சமயம் பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

Advertisement

அந்தவகையில் நேற்று நடைபெற்ற 8ஆவது பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற விண்டீஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியானது தொடக்கத்தில் விக்கெட்டை இழந்து தடுமாறினாலும், சதர்லேண்ட் 38 ரன்களையும், ஆஷ்லே கார்ட்னர் 31 ரன்களையும் சேர்த்து உதவ, 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 8 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்களைச் சேர்த்தது. விண்டீஸ் தரப்பில் ஆலியா அலீன், அஃபி ஃபிளெட்சர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

Advertisement

அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய விண்டீஸ் அணிக்கு கேப்டன் ஹீலி மேத்யூஸ் மற்றும் கியானா ஜோசப் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் ஹீலி மேத்யூஸ் 42 ரன்களையும், கியானா ஜோசப் 36 ரன்களிலும் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்ப அடுத்து களமிறங்கிய வீராங்கனைகள் எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் விண்டீஸ் அணி 17.5 ஓவர்களில் 109 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய தரப்பில் அலானா கிங் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் விண்டீஸை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

அதேபோல் நேற்று நடைபெற்ற 9ஆவது பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியானது அமெலியா கெரின் அரைசதத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக அமெலியா கெர் 8 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 64 ரன்களைச் சேர்த்தார். இங்கிலாந்து அணி தரப்பில் லாரன் பெல், லின்சே ஸ்மித், சாரா கிளென், சார்லீ டீன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். 

இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணியில் டேனியல் வையட் 35 ரன்களையும், நாட் ஸ்கைவர் பிரண்ட் 31 ரன்களையும் சேர்த்து ஆட்டமிழந்த நிலையில், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டேனியல் கிப்சன் 24 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் இங்கிலாந்து மகளிர் அணி 17 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து மகளிர் அணியை வீத்தி வெற்றிபெற்றது. மேற்கொண்டு நேற்று நடைபெற்ற மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணியை வீழ்த்திய குறிப்பிடத்தக்கது.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News