ZIM vs IND, 2nd ODI: சாம்சன், தவான் சிறப்பு; தொடரை வென்றது இந்தியா!

Updated: Sat, Aug 20 2022 18:25 IST
Image Source: Google

இந்தியா - ஜிம்பாப்வே இடையேயான 3  ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நிலையில், 2வது ஒருநாள் போட்டி இன்று நடந்துவருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கேஎல் ராகுல் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். இந்த போட்டிக்கான இந்திய அணியில் ஒரு மாற்றம் மட்டும் செய்யப்பட்டது. தீபக் சாஹர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஷர்துல் தாகூர் சேர்க்கப்பட்டார்.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய ஜிம்பாப்வே அணி முதல் போட்டியை போலவே இந்த போட்டியிலும் தொடக்கம் முதலே மளமளவென விக்கெட்டுகளை இழந்தது.  31 ரன்களுக்கே ஜிம்பாப்வே அணி 4 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், சீன் வில்லியம்ஸும் ரியான் பர்லும் சிறப்பாக பேட்டிங் ஆடினர்.

சீன் வில்லியம்ஸ் 42 ரன்களும், ரியான் 39 ரன்களும் அடித்தனர். மற்றவர்கள் அனைவருமே சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, 38.1ஓவரில் வெறும் 161 ரன்களுக்கு ஆல் அவுட்டானது ஜிம்பாப்வே அணி.

இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக ஷர்துல் தாகூர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பிரசித் கிருஷ்ணா, சிராஜ், அக்ஸர் படேல், தீபக் ஹூடா, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

அதன்பின் 162 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியில் கேப்டன் கேஎல் ராகுல் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து பெரும் ஏமாற்றமளித்தார். பின்னர் ஜோடி சேர்ந்த ஷிகர் தவான் - ஷுப்மன் கில் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இதில் இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இருவரும் தலா 33 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தனர். இதையடுத்து களமிறங்கிய இஷான் கிஷன் 6 ரன்னிலும், தீபக் ஹூடா 25 ரன்காளிலும் விக்கெட்டை இழந்தனர். 

இருப்பினும் இறுதிவரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சஞ்சு சாம்சன் 43 ரன்களைச் சேர்த்ததுடன், அணியை வெற்றிக்கும் அழைத்துச் சென்றார். இதன்மூலம் 25.4 ஓவர்களிலேயே இந்திய அணி இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியும் அசத்தியது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை