
ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2025ஆம் ஆண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் குரூப் ஏ பிரிவில் இருந்து இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளன.இதனால் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்திருந்த தொடரை நடத்தும் பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறியுள்ளன.
இந்நிலையில் இன்று நடைபெற இருந்த 9ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் தங்களின் கடைசி லீக் போட்டியில் விளையாட இருந்தது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருந்தது. அனால் போட்டி தொடங்கும் முன்னேரே மழை பெய்த காரணத்தால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
அதன் பின்னரும் மழை தொடர்ந்ததன் காரணமாக பாகிஸ்தான் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இப்போட்டி டாஸ் போடப்படாமலேயே கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தொடரை நடத்தும் பாகிஸ்தான் அணி நடப்பு சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் ஒரு வெற்றியைக் கூட பதிவுசெய்யாமல் தொடரில் இருந்து வெளியேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.