
Dewald Brevis Record: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்காவின் டெவால்ட் பிரீவிஸ் சதமடித்து அசத்தியதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் சில சாதனைகளை படைத்துள்ளார்.
தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் தென்னாப்பிரிக்க அணியானது 53 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றி பெற்றதுடன், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரையும் 1-1 என்ற கணக்கில் சமன்செய்துள்ளது. மேலும் இந்த போட்டியில் சதமடித்து அசத்திய தென்னாப்பிரிக்க வீரர் டெவால்ட் பிரீவிஸ் ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.
இந்நிலையில் இப்போட்டியில் தென்னாப்பிரிக்காவின் நட்சத்திர பேட்ஸ்மேன் டெவால்ட் பிரெவிஸ் சதமடித்து அசத்தியதுடன் சில சாதனைகளையும் படைத்துள்ளார். அதன்படி, தென்னாப்பிரிக்காவிற்காக டி20 வடிவத்தில் சதம் அடித்த இளம் வீரர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார். இதற்கு முன் அந்த அணியின் முன்னாள் வீரர் குயின்டன் டி காக் பெயரில் இந்த சாதனை இருந்த நிலையில், தற்போது டெவால்ட் பிரீவிஸ் புதிய சாதனையை படைத்துள்ளார்.