
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் இந்தியா- வங்கதேச அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேச 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 228 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக தாவ்ஹித் ஹிரிடோய் 100 ரன்களையும், ஜக்கர் அலி 67 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 5 விக்கெட்டுகளையும், ஹர்ஷித் ரானா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
ஆதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் சோபிக்க தவறிய நிலையில், அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷுப்மன் கில் சதமடித்து அசத்தியதுடன் 101 ரன்களையும், அவருடன் இணைந்து விளையாடிய கேஎல் ராகுல் 41 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் இந்திய அணி 46.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இந்நிலையில் இப்போட்டியின் மூலம் இந்திய வீரர் விராட் கோலி சாதனை ஒன்றையும் படைத்துள்ளார். இப்போட்டியில் ஃபீல்டிங்கின்போது, விராட் கோலி இரண்டு கேட்ச்சுகளைப் பிடித்தார். இதன் மூலம், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி அதிக கேட்சுகளை பிடித்த வீரர் எனும் முன்னாள் கேப்டன் முகமது அஸாருதீனின் சாதனையை விராட் கோலி சமன் செய்துள்ளார். முன்னதாக முகமது அஸாருதீன் 156 கேட்ச்சுகளை பிடித்திருந்த நிலையில், தற்போது விராட் கோலியும் 156 கேட்ச்சுகளை பிடித்து அசத்தியுள்ளார்.
இந்திய அணிக்காக அதிக கேட்ச்சுகள் பிடித்த வீரர்கள் (ஒருநாள்)
- முகமது அஸாருதீன் - 156 கேட்ச்சுகள்
- விராட் கோலி - 156* கேட்ச்சுகள்
- சச்சின் டெண்டுல்கர் - 140 கேட்ச்சுகள்
- ராகுல் டிராவிட் - 124 கேட்ச்சுகள்
- சுரேஷ் ரெய்னா - 102 கேட்ச்சுகள்