
நியூசிலாந்து - ஜிம்பாப்வே இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று புலவாயோவில் உள்ள குயின்ஸ் போட்ர்ட்ஸ் கிளப் மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணியிம் பிராண்டன் டெய்லர் 44 ரன்களையும், தஃபத்ஸ்வா 33 ரன்களையும் எடுத்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்ஸில் 125 ரன்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. நியூசிலாந்து அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய மேட் ஹென்றி 5 விக்கெட்டுகளையும், ஸகாரி ஃபால்க்ஸ் 4 விக்கெட்டுகளையும், மேத்யூ ஃபிஷர் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்.அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணிக்கு வில் யங் - டெவான் கான்வே இணை தொடக்கம் தந்தனர்.
இதில் இருவரும் அரைசதம் கடந்ததுடன், 162 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். பின் வில் யங் 11 பவுண்டரிகளுடன் 74 ரன்களைச் சேர்த்த கையோடு தனது விக்கெட்டை இழந்தார். இதன் காரணமாக நியூசிலாந்து அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 174 ரன்களை அடித்தது. இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை டெவான் கான்வே 79 ரன்களுடனும், ஜேக்கப் டஃபி 8 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் டெவான் கான்வே சதமடித்து அசத்திய நிலையில், ஜேக்கப் டஃபி 36 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.