BAN vs NZ, 1st Test: ஹசன் ஜாய் அரைசதம்; பந்துவீச்சில் கலக்கிய பிலீப்ஸ்!
நியூசிலாந்து அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. சில்ஹாட்டில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
அதன்படி களமிறங்கிய வங்கதேச அணிக்கு மஹ்முதுல் ஹசன் ஜாய் மற்றும் ஜாகிர் ஹசன் களமிறங்கினர். இதில் ஜாகிர் ஹசன் 12 ரன்கள் அடித்த நிலையில் அஜாஸ் படேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதபின் களமிறங்கிய கேப்டன் நஜ்முல் ஹொசைன் சிறிது நேரம் தாக்குப்பிடித்த நிலையில் 37 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் மஹ்முதுல் ஹசன் ஜாய் நிலைத்து விளையாடினார்.
அவருக்கு மொமினுல் ஹக் சிறிது நேரம் ஒத்துழைப்பு கொடுத்தார். அதன்பின் மொமினுல் ஹக்கு 37 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்ப நிலைத்து நின்று விளையாடிய மஹ்முதுல் ஹசன் ஜாய் அரைசதம் கடந்து 86 ரன்களை எடுத்த நிலையில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதனைத்தொடர்ந்து களமிறங்கிய வீரர்களால் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இதன் காரணமாக முதல்நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 310 ரன்களைச் சேர்த்தது. வங்கதேச அணியில் சொரிஃபுல் இஸ்லாம் 13 ரன்களிலும், தைஜுல் இஸ்லாம் 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக கிளென் பிலிப்ஸ் 4 விக்கெட்டுகளையும், அஜாஸ் படேல், கைல் ஜேமிசன் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.