ஸ்லோ ஓவர் ரேட்: பாகிஸ்தான் வீரர்களுக்கு ஐசிசி அபராதம்!

Updated: Thu, Nov 13 2025 21:12 IST
Image Source: Google

இலங்கை அணி தற்சமயம் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவு செய்து அசத்தியது. இதன் மூலம் பாகிஸ்தான் அணி 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் பெற்றுள்ளது.

இதனையடுத்து தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை ராவல்பிண்டியில் உள்ள ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் பாகிஸ்தான் அணி ஏற்கெனவே வெற்றி பெற்ற உத்வேகத்துடனும், இலங்கை அணி முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முன்னைப்புடனும் இப்போட்டியை எதிர்கொள்ள இருக்கின்றன.

இதனால் இந்த ஆட்டத்தில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. மேலும் இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக பாகிஸ்தான் அணிக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது. அந்தவகையில் இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது. 

இப்போட்டியில் பாகிஸ்தான் அணி குறிப்பிட்ட நேரத்தைக் காட்டிலும் 4 ஓவர்கள் குறைவாக பந்துவீசியது. இது ஐசிசி நடத்தை விதிகளின் படி குற்றம் என்பதால் போட்டிக்கட்டணத்தில் இருந்து 20 சதவீதம் அபராதம் விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இக்குற்றத்தை பாகிஸ்தான் அணி கேப்டன் ஷாஹீன் அஃப்ரிடி ஒப்புக்கொண்டு அபராதத்தை ஏற்றதையடுத்து மேற்கொண்டு விசாரணை தேவையில்லை என்றும் கூறியுள்ளது.

பாகிஸ்தான் ஒருநாள் அணி: ஷஹீன் ஷா அப்ரிடி (கேப்டன்), அப்ரார் அகமது, பாபர் ஆசம், ஃபஹீம் அஷ்ரஃப், ஃபைசல் அக்ரம், ஃபகார் ஜமான், ஹாரிஸ் ரவுஃப், ஹசீபுல்லா, ஹுசைன் தலாத், முகமது நவாஸ், முகமது ரிஸ்வான், முகமது வாசிம் ஜூனியர், நசீம் ஷா, சைம் அயூப், சல்மான் அலி ஆகா

Also Read: LIVE Cricket Score

இலங்கை ஒருநாள் அணி: சரித் அசலங்கா (கேப்டன்), பதும் நிஷங்க, லஹிரு உதார, கமில் மிஷார, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, கமிந்து மெண்டிஸ், ஜனித் லியனகே, பவன் ரத்நாயக்க, வனிந்து ஹசரநாக, மஹேஷ் தீக்ஷன, ஜெஃப்ரி வன்டர்சே, துஷ்மந்த சமீர, அசித்த பெர்னாண்டோ, பிரமோத் மதுஷன், ஈஷான் மலிங்க

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை