1st Test, DAY 1: பென் ஸ்டோக்ஸ் அதிரடி அரைசதம்; அஸ்வின், ஜடேஜா சுழலில் சுருண்டது இங்கிலாந்து!

Updated: Thu, Jan 25 2024 15:05 IST
Image Source: Google

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று தொடங்கியது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி ஹைதராபாத்திலுள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. 

இதையடுத்து இங்கிலாந்து தரப்பில் இன்னிங்ஸைத் தொடங்க பென் டக்கெட் - ஸாக் கிரௌலி இணை களமிறங்கியது. ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய இருவரும் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி இந்திய பந்துவீச்சாளர்களை தடுமாறச்செய்தனர். இதனால் முதல் 10 ஓவர்களில் விக்கெட் இழக்காமல் விளையாடிய இந்த இணை முதல் விக்கெட்டிற்கு 55 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. 

அதன்பின் அதிரடியாக விளையாடிய பென் டக்கெட் 35 ரன்கள் எடுத்த நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் சுழலில் தனது விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஒல்லி போப் ஒரு ரன்னில் ரவீந்திர ஜடேஜாவிடம் வீழ்ந்தார். அதனைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரர் ஸாக் கிரௌலி 20 ரன்கள் எடுத்த நிலையில் சிராஜின் அபாரமான கேட்ச்சால் அஸ்வின் பந்துக்கு விக்கெட்டை இழந்தார்.

இதனால் இங்கிலாந்து அணி 60 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த ஜோ ரூட் - ஜானி பேர்ஸ்டோவ் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரையும் சீரான வேகத்தில் உயர்த்தினர். இதைத்தொடர்ந்து உணவு இடைவேளைக்குபின் தொடங்கிய ஆட்டத்தில் ஜானி பேர்ஸ்டோவ் 37 ரன்களுக்கும், ஜோ ரூட் 29 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தனர். 

அதன்பின் களமிறங்கிய கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஒருமுனையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுபக்கம் களமிறங்கிய பென் ஃபோக்ஸ் 4, ரெஹான் அஹ்மத் 13, டாம் ஹார்ட்லி 23, மார்க் வுட் 11 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இருப்பினும் மறுபக்கம் அதிரடியாக விளையாடிய பென் ஸ்டோக்ஸ் தனது அரைசதம் கடந்து அசத்தினார். 

தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பென் ஸ்டோக்ஸ் 6 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 70 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இதனால் இங்கிலாந்து அணி 246 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய அஸ்வின் மற்றும் ஜடேஜா தலா 3 விக்கெட்டுகளையும், அக்ஸர் பெடேல், ஜஸ்ப்ரித் பும்ரா தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை