முதல் இன்னிங்ஸில் செய்த தவறு தான் எங்களை தோல்வியடைய செய்தது - ஷாகிப் அல் ஹசன்!

Updated: Sun, Dec 18 2022 12:13 IST
Image Source: Google

வங்கதேசம்-இந்தியா அணிகளுக்கு இடையே நடந்த முதல் டெஸ்ட் போட்டி சட்டோகிராம் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணிக்கு ஸ்ரேயாஸ் 86, புஜாரா 90, அஸ்வின் 58 ரன்கள் அடிக்க, 404 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. முதல் இன்னிங்சில் வங்கதேசம் அணிக்கு எவரும் நிலைத்து நின்று ஆடவில்லை ஆகையால் 150 ரன்களுக்கு சுருண்டது. குல்தீப் 5 விக்கெட்டுகள், சிராஜ் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

அதன்பின் ஃபாலோ ஆன் செய்ய வாய்ப்பு இருந்தும் கேஎல் ராகுல் அடை செய்யாமல் இந்தியா பேட்டிங் செய்யும் என முடிவெடுத்தார். 2வது இன்னிங்சில் சுப்மன் கில் மற்றும் புஜாரா இருவரும் சதம் அடித்தனர். இதனால் மேலும் வலுவான நிலை பெற்ற இந்திய அணி 258/2 என இருக்கும்போது, ராகுல் டிக்ளர் செய்வதாக அறிவித்தார். அப்போது இந்தியா 512 ரன்கள் முன்னிலையில் இருந்தது.

513 ரன்கள் அடித்தால் என்று வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேசம் அணிக்கு துவக்க வீரர்கள் நன்றாக போராடினர். சாண்டோ 67 ரன்கள், அறிமுக வீரர் சாகிர் உசேன் சதம் அடித்து நல்ல துவக்கம் அமைத்துக் கொடுத்தனர். மிடில் ஆர்டரில் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் (84) தவிர எவருமே போராடவில்லை. இறுதிவரை நடந்த அவரது போராட்டமும் எடுபடவில்லை. அக்ஸர் பட்டேல் மற்றும் குல்தீப் இருவரும் சுழலில் மொத்த வங்கதேச அணியும் வீழ்ந்தது. இன்னிங்ஸ் முடிவில் வங்கதேசம் அணி 324 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

அக்ஸர் நான்கு விக்கெட்டுகள் மற்றும் குல்தீப் மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினர். 188 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்படியலில் 3ம் இடத்திற்கு முன்னேற்றம் கண்டது.

இத்தோல்விக்கு பின் பேசிய வங்கதேச அணியின் கேப்டன் ஷாகிப் அல் ஹசன், “மைதானம் பேட்டிங் செய்ய சிறப்பாக இருந்தது. ஆனால் நாங்கள் சரிவர பேட்டிங் செய்யவில்லை. கிட்டத்தட்ட ஐந்து, ஆறு மாதங்கள் கழித்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறோம். ஆனால் இதை ஒரு காரணமாக கூற இயலாது. இப்போட்டியில் நாங்கள் வென்றிருக்க வேண்டும். முதல் இன்னிங்ஸில் செய்த தவறு தான் எங்களை இந்நிலைக்கு தள்ளியுள்ளது. அந்த தவறை சரி செய்து கொண்டு இரண்டாவது இன்னிங்ஸில் நன்றாக விளையாடினோம். இந்திய அணி பந்துவீச்சில் பார்ட்னர்ஷிப் அமைத்து எங்களை வீழ்த்தினார்கள். அந்த வகையில் இந்தியாவை பாராட்டியாக வேண்டும்.

அறிமுக வீரர் ஜாகிர் உசேன் சதம் அடித்தது எங்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. உள்ளூர் போட்டிகளில் அவர் நிறைய ரன்கள் அடித்திருக்கிறார். அதை கவனத்தில் கொண்டு தேர்வுக்குழுவினர் சர்வதேச அணிக்குள் எடுத்திருக்கின்றனர். அதற்கு நியாயம் சேர்த்திருக்கிறார். இத்துடன் நிற்காமல் இன்னும் நிறைய சதங்கள் அடிப்பார் என்று நம்புகிறேன்.

டெஸ்ட் போட்டியில் ஐந்து நாட்களும் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் அணியே வெற்றி பெறும். அந்த வகையில் இந்திய அணிக்கு இது தகுதியான வெற்றி தான். முதல் இன்னிங்சில் 48/3 என இருந்தபோது, நாங்கள் அவர்களை கட்டுப்படுத்த தவறி விட்டோம். இந்த தவறுதான் எங்களுக்கு தோல்வியை தந்திருக்கிறது. நாங்கள் வெற்றி பெற்றிருக்கக் கூடிய டெஸ்ட் போட்டி இது.” என்றார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை