பகலிரவு டெஸ்ட்: இங்கிலாந்தை 275 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி!

Updated: Mon, Dec 20 2021 16:10 IST
Image Source: Google

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகளைக் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. 

இதில் இரு அணிகளுக்கும் இடையேயான 2ஆவது டெஸ்ட், பகலிரவு போட்டியாக அடிலெய்டில் வியாழன் அன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. 

அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 150.4 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 473 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. லபுசாக்னே103, வார்னர் 95, ஸ்டீவ் ஸ்மித் 93 ரன்கள் எடுத்தார்கள். ஸ்டோக்ஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

அதன்பிறகு விளையாடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 84.1 ஓவர்களில் 236 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது. டேவிட் மலான் 80, கேப்டன் ஜோ ரூட் 62 ரன்கள் எடுத்தார்கள். ஸ்டார்க் 4 விக்கெட்டுகளையும் லயன் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள். 

இங்கிலாந்து அணி ஃபாலோ ஆன் ஆனாலும் 2ஆவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்ய ஆஸ்திரேலிய அணி முடிவெடுத்தது. இங்கிலாந்து அணி 237 ரன்கள் பின்தங்கியிருந்தது.

பின் ஆஸ்திரேலிட அணி 2ஆவது இன்னிங்ஸில் 61 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 230 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. லபுசாக்னே, டிராவிஸ் ஹெட் தலா 51 ரன்கள் எடுத்தார்கள். இதனால் பகலிரவு டெஸ்டை வெற்றி பெற இங்கிலாந்து அணிக்கு 468 ரன்கள் இலக்கு அளிக்கப்பட்டது.

இந்நிலையில் 5ஆம் நாளன்று தோல்வியைத் தவிர்க்கப் போராடிய இங்கிலாந்து அணி, 113.1 ஓவர்களில் 192 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கிறிஸ் வோக்ஸ் 44 ரன்கள் எடுத்தார். ஜாஸ் பட்லர், 207 பந்துகளை எதிர்கொண்டு 26 ரன்கள் எடுத்து கடைசியில் ஹிட் விக்கெட் முறையில் துரதிர்ஷ்டவசமாக ஆட்டமிழந்தார். 

இப்போட்டியில் ஜெய் ரிச்சர்ட்சன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். 

இதன் மூலம் 2ஆவது டெஸ்டை 275 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலிய அணி, ஆஷஸ் தொடரில் 2-0 என முன்னிலை பெற்றுள்ளது. மேலும் இரு அணிகளுக்கும் இடையேயான 3ஆவது டெஸ்ட், மெல்போர்னில் டிசம்பர் 26 அன்று தொடங்குகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை