PAK vs ENG, 2nd T20I: பாபர் ஆசாம் அதிரடி சதம்; 10 விக்கெட் வித்தியாசத்தில் பாக். வெற்றி!

Updated: Fri, Sep 23 2022 09:05 IST
2nd T20I: Babar Azam, Mohammad Rizwan Power Pakistan To Thumping 10-Wicket Win Over England (Image Source: Google)

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி கராச்சியில் நேற்று நடைபெற்றது. 

இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர்கள் சால்ட் 30, அலேக்ஸ் ஹேல்ஸ் 26 ஆகியோர் ஓரளவுக்கு சிறப்பான துவக்கம் தந்தார்கள். 

அடுத்து களமிறங்கிய டேவிட் மலான் கோல்டன் டக் ஆனார். தொடர்ந்து டக்கட் 43, ஹேரி ப்ரூக்ஸ் 31, மொயின் அலி 55 ஆகியோர் அதிரடியாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டார்கள். இதனால், இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 199/5 ரன்களை குவித்தது.

இதையடுத்து கடின இலக்கை துரத்திக் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் முகமது ரிஸ்வான், கேப்டன் பாபர் அசாம் இருவரும் கடைசிவரை களத்தில் இருந்தார்கள். இங்கிலாந்து அணியால் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்த முடியவில்லை.

முகமது ரிஸ்வான் 51 பந்துகளில் 5 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் உட்பட 88 ரன்களை குவித்து அசத்தினார். கேப்டன் பாபர் அசாம் 66 பந்துகளில் 11 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் உட்பட 110 ரன்களை எடுத்து, டி20 கிரிக்கெட்டில் இரண்டாவது சதத்தை பூர்த்தி செய்தார். இதனால், பாகிஸ்தான் அணி 19.3 ஓவர்களில் 203/0 ரன்களை சேர்த்து, 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.

பாகிஸ்தான் அணி இப்படி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெறுவது இது இரண்டாவது முறையாகும். இதற்குமுன் கடந்த டி20 உலகக் கோப்பை லீக் சுற்றின்போது இந்திய அணிக்கு எதிராக 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி இன்று கராச்சியில் நடைபெறவுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை