Nz vs Ban: வங்கதேசத்தை வீழ்த்தி தொடரை வென்றது நியூசிலாந்து!
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் வங்கதேச அணி டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இன்று நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து விளையாடியது.
அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு கிளென் பிலீப்ஸ் அதிரடியாக விளையாடி அரைசதமடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 173 ரன்களை எடுத்தது.
நியூசிலாந்து அணி தரப்பில் கிளென் பிலீப்ஸ் 58 ரங்களையும், டேரில் மிட்ச்செல் 37 ரன்களையும் சேர்த்தனர். வங்கதேச அணி மெஹ்தி ஹசன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதையடுத்து வெற்றி இலக்கை துரத்திய வங்கதேச அணிக்கு சௌமிய சர்க்கார், முகமது நைம் இணை அதிரடியாக விளையாடி அணிக்கு வலுசேர்த்தது. இதில் சௌமிய சர்க்கார் அரைசதம் அடித்தும் அசத்தினார்.
இருப்பினும் பின்னர் வந்த வீரர்கள் நியூசிலாந்து அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் தரும்பினர். மேலும் ஆட்டத்தின் 16ஆவது ஓவரின் போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டது.
தொடர்ந்து மழை பெய்த காரணத்தால் டக்வர்த் லூயிஸ் முறைப்படி நியூசிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
இப்போட்டியில் அரைசதம் அடித்து அணியின் வெற்றிக்கு உதவிய கிளென் பிலீப்ஸ் ஆட்டநாயகனாக தேர்வுசெய்யப்பட்டார்.