2nd Test, Day 3: எளிய இலக்கை நிர்ணயித்த விண்டீஸ்; தடுமாற்றத்தில் ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான பகலிரவு டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனிலுள்ள கபா கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி தங்களது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 311 ரன்களைச் சேர்த்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக ஜோசுவா டா சில்வா 79 ரன்களையும், கெவின் சின்க்ளெர் 71 ரன்களையும் சேர்த்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளையும், ஜோஷ் ஹசில்வுட், நாதன் லையன் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர். இதையடுத்து இன்னிங்ஸைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 24 ரன்களுக்குகே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அதன்பின் அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ், ஊஸ்மான் கவாஜா ஆகியோர் அரைசதம் கடந்து அசத்தினர். இதன்மூலம் அந்த அணி 9 விக்கெட் இழப்பிற்கு 289 ரன்களைச் சேர்த்த நிலையில் டிக்ளர் செய்வதாக அறிவித்த்து. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் கீமார் ரோச் 4 விக்கெட்டுகளையும், அல்ஸாரி ஜோசப் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணி ஆட்டநேர முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 13 ரன் எடுத்திருந்தது. இதையடுத்து 35 ரன்கள் முன்னிலையுடன் இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணியில் கேப்டன் கிரேய்க் பிராத்வைட் 16 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
அதன்பின் இணைந்த அலிக் அதானாஸ் - கிர்க் மெக்கன்ஸி இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். பின் இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கிர்க் மெக்கன்ஸ் 41 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து அலிக் அதானாஸ் 35 ரன்களுக்கும், கேவம் ஹாட்ஜ் 29 ரன்களுக்கும், ஜஸ்டின் க்ரீவ்ஸ் 33 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர்.
இதனையடுத்து கடந்த இன்னிங்ஸில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோசுவா டா சில்வா 7 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த கீமார் ரோச், அல்ஸாரி ஜோசப் ஆகியோரும் வந்த வேகத்தில் நடையைக் கட்டினர். அதன்பின் களமிறங்கிய ஷமார் ஜோசப் 3 ரன்கள் எடுத்த நிலையில் மிட்செல் ஸ்டார்க் பந்துவீச்சில் காயமடைந்து ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் பெவிலியன் திருபினார்.
இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 193 ரன்கள் எடுத்த நிலையில் ஆல் அவுட் ஆனதாக அறிவிக்கப்பட்டது. இதில் ஆட்டமிழக்காமல் இருந்த கெவின் சின்க்ளேர் 14 ரன்களுடன் களத்தில் இருந்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஜோஷ் ஹசில்வுட், நாதன் லையன் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதனால் ஆஸ்திரேலிய அணிக்கு 216 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் உஸ்மான் கவாஜா 10 ரன்களிலும், அடுத்து வந்த மார்னஸ் லபுஷாக்னே 5 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். இருப்பினும் மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஸ்டீவ் ஸ்மித் அணியின் ஸ்கோரை உயர்த்தி வருகிறார். இதனால் 3ஆம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 60 ரன்களை எடுத்துள்ளது.
இதில் ஸ்டீவ் ஸ்மித் 33 ரன்களுடனும், கேமரூன் க்ரீன் 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அல்ஸாரி ஜோசப், ஜஸ்டின் க்ரீவ்ஸ் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றியுள்ளனர். இதையடுத்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி நாளை 4ஆம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.