2nd Test, Day 4: ஷமார் ஜோசப் மிரட்டல் பந்துவீச்சு; ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் வரலாற்று வெற்றி!

Updated: Sun, Jan 28 2024 13:05 IST
2nd Test, Day 4: ஷமார் ஜோசப் மிரட்டல் பந்துவீச்சு; ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் வரலாற்று வெ (Image Source: Google)

ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான பகலிரவு டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனிலுள்ள கபா கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி தங்களது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 311 ரன்களைச் சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜோசுவா டா சில்வா 79 ரன்களையும், கெவின் சின்க்ளெர் 71 ரன்களையும் சேர்த்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளையும், ஜோஷ் ஹசில்வுட், நாதன் லையன் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர்.

இதையடுத்து இன்னிங்ஸைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 24 ரன்களுக்குகே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ், ஊஸ்மான் கவாஜா ஆகியோர் அரைசதம் கடந்து அசத்தினர். இதன்மூலம் அந்த அணி 9 விக்கெட் இழப்பிற்கு 289 ரன்களைச் சேர்த்த நிலையில் டிக்ளர் செய்வதாக அறிவித்த்து. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் கீமார் ரோச் 4 விக்கெட்டுகளையும், அல்ஸாரி ஜோசப் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணியில் கேப்டன் கிரேய்க் பிராத்வைட் 16 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கிர்க் மெக்கன்ஸி 41 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து அலிக் அதானாஸ் 35 ரன்களுக்கும், கேவம்  ஹாட்ஜ் 29 ரன்களுக்கும், ஜஸ்டின் க்ரீவ்ஸ் 33 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். 

இதனையடுத்து கடந்த இன்னிங்ஸில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோசுவா டா சில்வா 7 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த கீமார் ரோச், அல்ஸாரி ஜோசப் ஆகியோரும் வந்த வேகத்தில் நடையைக் கட்டினர். அதன்பின் களமிறங்கிய ஷமார் ஜோசப் 3 ரன்கள் எடுத்த நிலையில் மிட்செல் ஸ்டார்க் பந்துவீச்சில் காயமடைந்து ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் பெவிலியன் திருபினார்.  இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 193 ரன்கள் எடுத்த நிலையில் ஆல் அவுட் ஆனதாக அறிவிக்கப்பட்டது. இதில் ஆட்டமிழக்காமல் இருந்த கெவின் சின்க்ளேர் 14 ரன்களுடன் களத்தில் இருந்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஜோஷ் ஹசில்வுட், நாதன் லையன் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதனால் ஆஸ்திரேலிய அணிக்கு 216 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் உஸ்மான் கவாஜா 10 ரன்களிலும், அடுத்து வந்த மார்னஸ் லபுஷாக்னே 5 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். இருப்பினும் மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஸ்டீவ் ஸ்மித் அணியின் ஸ்கோரை உயர்த்தி வருகிறார். இதனால் 3ஆம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 60 ரன்களை எடுத்துள்ளது. 

இதையடுத்து இன்று தொடங்கிய நான்காம் நாள் ஆட்டத்தை ஸ்டீவ் ஸ்மித் 33 ரன்களுடனும், கேமரூன் க்ரீன் 9 ரன்களுடனும் தொடர்ந்தர். இருவரும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி எளிதாக வெற்றிபெறும் என அனைவ்ரும் எதிர்பார்த்தனர். ஆனால் அனைவரது எதிர்பார்ப்புகளையும் தவிடுபொடியாக்கும் வகையில் நேற்றைய போட்டியில் காயமடைந்து மருத்துவ சிகிச்சை பொற்றுவந்த அறிமுக வீரர் ஷமார் ஜோசாப் தனது அபார பந்துவீச்சால் ஆஸ்திரேலியாவை நிலைகுலைய வைத்தார்.

இதில் கேமரூன் க்ரீன் 42 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய டிராவிஸ் ஹெட் முதல் பந்திலேயும், மிட்செல் மார்ஷ் 10 ரன்களிலும், அலெக்ஸ் கேரி 2 ரன்களிலும், மிட்செல் ஸ்டார்க் 21 ரன்களிலும், பாட் கம்மின்ஸ் 2 ரன்களிலும், ஜோஷ் ஹசில்வுட் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து ஷமார் ஜோசப் பந்துவீச்சில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். மறுபக்கம் அணியின் வெற்றிக்காக போராடிய ஸ்டீவ் ஸ்மித் 91 ரன்களைச் சேர்த்த நிலையிலும் அந்த அணியால் வெற்றிபெற முடியவில்லை.

இதனால் ஆஸ்திரேலிய அணி 207 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய அறிமுக வீரர் ஷமார் ஜோசப் 11.5 ஓவர்களை வீசி 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பெற்றதுடன், 1-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் சமன்செய்தது. மேலும் ஆஸ்திரேலிய மண்ணில் 30 ஆண்டுகளுக்கு பின் வெஸ்ட் இண்டீஸ் அணி தங்களது முதல் டெஸ்ட் வெற்றியையும் பதிவுசெய்து அசத்தியுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை