பிஎஸ்எல் போட்டிகளை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட நான்கு பேர் கைது!
இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் டி20 தொடர் போல, பாகிஸ்தானில் ‘பாகிஸ்தான் சூப்பர் லீக்’ (PSL) என்ற தொடர் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு அபுதாபில் நடைபெற்றுவரும் பிஎஸ்எல் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.
இந்த நிலையில் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகள் மீது ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் சூதாட்டம் நடப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து பனோரமா ஹில்ஸ் பகுதியில் காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது பிஎஸ்எல் கிரிக்கெட் போட்டிகள் மீது சூதாட்டம் நடத்திய 4 பேரை காவல்துறை கைது செய்தனர். இதனை அடுத்து அவர்களிடமிருந்து இரண்டு டிவிகள், இரண்டு லேப்டாப்கள், ஒரு டேப், மூன்று ஸ்மார்ட்போன்கள் மற்றும் 5 வங்கி கணக்கு புத்தகம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் இந்த சூதாட்டமானது நேற்று நடைபெற்ற கிளேடியேட்டர்ஸ் மற்றும் பெஸ்வர் அணிகளுக்கு இடையேயான போட்டியின் மீது நடைபெற்றதாகவும், இதை ஸ்ரீனிவாஸ் என்பவர் ஒருங்கிணைத்து நடத்தியதாகவும் பிஎம் பாலம் காவல் ஆய்வாளர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் சூப்பர் லீக் மீது இந்தியாவில் சூதாட்டம் நடைபெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.