டி20 கிரிக்கெட்: பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா த்ரில் வெற்றி!
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டி இன்று (மார்ச் 16) அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி ரோஹித் சர்மா, கே.எல். ராகுல் இணை தொடக்க வீரர்களாக களமிறங்கியது. அதில் ரஷித் வீசிய முதல் ஒவரிலேயே இரண்டு பவுண்டரிகளை விரட்டி ரோஹித் அதிரடி காட்ட, மறுமுனையில் ராகுல் நிதானமாக விளையாடினார். பின், மூன்றாவது ஓவரில் ரோஹித் 12 ரன்கள் எடுத்த நிலையில் ஆர்ச்சர் வீசிய பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து நடையைக்கட்டினார்.
அதன்பின் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ், சர்வதேசப் போட்டிகளில் தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே அசால்ட்டாக சிக்ஸ் அடித்து எதிரணியை மிரளவைத்தார். இதன் மூலம் பவர்-பிளே முடிவில் இந்திய அணி, 45 ரன்கள் எடுத்து ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்திருந்தது.
அதன்பின் நிதானமாக ஆடிய ராகுல் 14 ரன்களில் ஸ்டோக்ஸின் பந்து வீச்சில் ஆர்ச்சரிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். கடந்த போட்டியில் அரைசதம் அடித்த அசத்திய கோலி, இப்போட்டியில் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
அதன்பின்னும் தன் அதிரடி ஆட்டத்தைத் தொடர்ந்த சூர்யகுமார், 28 பந்துகளில் தனது முதல் சர்வதேச அரைசதத்தைப் பதிவுசெய்தார். ஸ்கோர் சீராக அதிகரித்துவந்த நிலையில் 13ஆவது ஓவரை வீசவந்த சாம் கரனின் முதல் பந்தை சிக்சர் அடித்து மிரட்டிய சூர்யகுமார், அடுத்த பந்தில் மாலன் கையில் கேட்ச் கொடுத்தார். மூன்றாம் நடுவர், பல ரீ-பிளேவிற்குப் பிறகும் சர்ச்சையான முறையில் அவுட் கொடுத்தார்.
இறுதி கட்ட ஓவர்களில் அதிரடி காட்டிய பந்த் 30 , ஹர்திக் பாண்டியா 11, ஸ்ரேயஸ் 37 ரன்களில் அவுட்டாக இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் ஆர்ச்சர் 4 விக்கெட்டுகளும், ரஷித், மார்க் வுட், ஸ்டோக்ஸ், சாம் கரன் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
அதன்பின் இமாலய இலக்கை துரத்திய இங்கிலாந்து அணிக்கு ஜோஸ் பட்லர், ஜேசன் ராய் இணை தொடக்கம் தந்தது. இன்னிங்ஸின் முதல் ஓவரை வீசிய புவனேஷ்வர்குமார் மெய்டனாக வீசி எதிரணிக்கு அழுத்தம் கொடுத்தார். இதையடுத்து, 9 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜோஸ் பட்லர் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அதையடுத்து களமிறங்கிய டேவிட் மாலனும் 14 ரன்களில் ஆட்டமிழ்ந்தார்.
மறுமுனையில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜேசன் ராய், 40 ரன்களில் ஆட்டமிழந்து அரை சதமடிக்கும் வாய்ப்பை இழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த ஜானி பேர்ஸ்டோவ் - பென் ஸ்டோக்ஸ் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியது. தொடர்ந்து அதிரடியில் மிரட்டி வந்த இந்த இணை 29 பந்துகளில் 50 ரன்களை பார்ட்னர்ஷிப் முறையில் கைப்பற்றியது.
அதன்பின் ஜானி பேர்ஸ்டோவ் 25 ரன்களில் ஆட்டமிழக்க ஆட்டத்தில் பரபரப்பு நிலவியது. மறுமுனையில் தொடர்ந்து பவுண்டரிகளை விளாசி வந்த பென் ஸ்டோக்ஸ் 46 ரன்களில் ஆட்டமிழக்க, அதற்கு அடுத்த பந்திலேயே கேப்டன் ஈயான் மோர்கன் ஷர்துல் தாக்கூரின் பந்தில் ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணியின் வெற்றியும் ஏறத்தாழ உறுதியானது.
இங்கிலாந்து அணி வெற்றிபெற கடைசி ஓவரில் 22 ரன்கள் தேவை என்ற நிலையில், ஷர்துல் தாக்கூர் பந்துவீசினார். இந்த ஓவரை எதிர்கொண்ட ஜோஃப்ரா ஆர்ச்சர் அதிரடியாக விளையாடி ஒரு பவுண்டரி, ஒரு சிக்சரை விளாசி ஆட்டத்தின் பரபரப்பை அதிகரித்தார். இருப்பினும் சாதுரியமாக பந்துவீசிய ஷர்துல் ஜோர்டன் விக்கெட்டை கைப்பற்றி அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார்.
இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி, டி20 தொடரை 2-2 என்ற கணக்கில் சமனில் முடித்துள்ளது.
இப்போட்டியில் இந்திய அணி தரப்பில் பந்துவீசிய ஷர்துல் தாக்கூர் 3 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா, ராகுல் சஹார் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு உதவினர்.