அச்சுறுத்தும் கரோனா - பிஎஸ்எல் தொடர் ஒத்திவைப்பு!
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் பங்கேற்றுள்ள வீரர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, பிஎஸ்எல் தொடரை ஒத்திவைப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
கரோனா அச்சுறுத்துலுக்கு மத்தியில் கிரிக்கெட் போட்டிகள், பார்வையாளர்களின்றி நடைபெற்று வருகிற்து. இதற்கிடையில் பாகிஸ்தானின் உள்ளூர் டி20 தொடரான பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் ஆறாவது சீசன் பிப்ரவரி 20ஆம் தேதி முதல் பார்வையாளர்களின்றி நடத்தப்பட்டது.
இத்தொடரின் லீக் போட்டிகள் நடைபெற்று வரும் சூழலில், வீரர்கள் சிலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. தொடர்ந்து, அவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், இங்கிலாந்து வீரர் டாம் பான்டன் உள்ளிட்ட சிலருக்கு தொற்று இருப்பது உறுதியானது.
இதனையடுத்து பிஎஸ்எல் தொடரை ஒத்திவைப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. தொற்று உறுதிசெய்யப்பட்ட வீரர்கள் அனைவரும் மருத்துவ கண்காணிப்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "போட்டியில் பங்கேற்ற மூன்று வீரர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், வீரர்களின் பாதுகாப்பைக்கருத்தில் கொண்டு உடனடி நடவடிக்கையாக பிஎஸ்எல் தொடரின் 6ஆவது சீசனை ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.