ஒரே ஓவரில் ஆறு சிக்சர்; மைதானத்தை அலறவிட்ட பொல்லார்ட்!
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் டிக்வெல்லா - குணத்திலகா இணை சிறப்பான தொடக்கத்தை தந்தனர். இதில் குணத்திலகா 4 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் களமிறங்கிய பதும் நிசான்கா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
பின்னர் டிக்வெல்லா 33 ரன்களிலும், நிசான்கா 39 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். அதன்பின் களமிறங்கிய வீரர்கள் எதிரணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்களை மட்டுமே எடுத்தது.
இதனையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்கள் லிண்டல் சிம்மன்ஸ் 26 ரன்களிலும், எவின் லீவிஸ் 28 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். அதன்பின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கிறிஸ் கெய்ல் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
மேலும், நிக்கோலஸ் பூரானின் விக்கெட்டை விழ்த்தியதன் மூலம் இலங்கை அணியில் அகிலா தனஞ்செயா ஹாட்ரிக் விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினார்.
அதன்பின் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பொல்லார்ட், தனஞ்செயா வீசிய ஓரே ஓவரில் ஆறு சிக்சர்களை பறக்கவிட்டு மைதானத்தை அலறவிட்டார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் 6 சிக்சர்களை விளாசிய மூன்றாவது பேட்ஸ்மேன் என்ற பெருமையையும் பெற்றார்.
முன்னதாக இந்திய அணியின் யுவராஜ் சிங், தென் ஆப்பிரிக்காவின் கிப்ஸ் சர்வதேச கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் 6 சிக்சர்களை விளாசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 13.1 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை எட்டி, 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய பொல்லார்ட் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.