SCO vs NZ, 1st T20I: ஆலன், சோதி அபாரம்; நியூசிலாந்து அசத்தல் வெற்றி!
ஸ்காட்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று எடின்பர்க்கில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்து நியூசிலாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு மார்ட்டின் கப்தில் - ஃபின் ஆலன் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்தனர். இதில் மார்ட்டின் கப்தில் 40 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
ஆனால் மறுமுனையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஃபின் ஆலன் 54 பந்துகளில் தனது முதல் சர்வதேச டி20 சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதையடுத்து களமிறங்கிய ஜிம்மி நீஷம் - டேரில் மிட்செல் இணை பவுண்டரியும் சிக்சர்களுமாக விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்களைச் சேர்த்தது.
இதையடுத்து கடின இலக்கை துரத்திய ஸ்காட்லாந்து அணிக்கு ஜார்ஜ் முன்சே - காலம் மெக்லோட் இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் முன்சே 28 ரன்களிலும், மெக்லோட் 33 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
இதையடுத்து களமிறங்கிய ஸ்காட்லாந்து வீரர்களாலும் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் ஸ்காட்லாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்களை மட்டுமே சேர்த்தது. நியூசிலாந்து தரப்பில் இஷ் சோதி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதன்மூலம் நியூசிலாந்து அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றியைப் பதிவுசெய்தது. இப்போட்டியில் சதமடித்த ஃபின் ஆலன் ஆட்டநாயகனாகத் தேர்வுசெய்யப்பட்டார்.