ஐசிசி உலகக்கோப்பை 2023 இறுதிப்போட்டி: களத்திற்குள் பாலஸ்தீன கொடியுடன் நுழைந்த ரசிகர் கைது!
உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீசத் தீர்மானித்தது. இதையடுத்து, களமிறங்கிய இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட் இழந்து தடுமாறி வருகிறது.
இந்நிலையில், போட்டியின் இடையே ‘பாலஸ்தீனத்தை காப்பாற்றுங்கள்’ என்ற வாசகம் அடங்கிய டீ-சர்ட் அணிந்த நபர் ஒருவர், கையில் பாலஸ்தீனக் கொடியுடன் உள்ளே நுழைந்தார். அப்போது கோலிக்கு அருகே வந்து அவரது தோளில் கைபோட்டு நின்றார். இதனால் மைதானத்தில் இருந்த வீரர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர்.
இதையடுத்து, விரைந்து வந்த பாதுகாப்பு அதிகாரிகள் அந்த நபரை அழைத்து சென்றனர். மைதானத்திற்கு நுழைந்த நபர் முகத்தில் பாலஸ்தீனக் கொடியால் செய்யப்பட்ட முகக்கவசம் அணிந்திருந்ததால் அவரது அடையாளம் தெரியவில்லை. இந்நிலையில், அந்த நபர் தற்போது கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அஹ்மதாபாத் மைதானத்தில் ஏற்பட்ட இந்த பாதுகாப்பு குறைபாடு, நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அந்நபரை கைதுசெய்துள்ள குஜராத் காவல்துறையினர் தற்போது விசாரணையில் ஈடுபட்டுவருவது குறிப்பிடத்தக்கது.