ஜாம்பவான்கள் பட்டியலில் இணையும் விராட் கோலி!
இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி 3-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.
இதனைத் தொடர்ந்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது. முதல் டெஸ்ட் வரும் 4ஆம் தேதி மொஹாலியில் துவங்கவுள்ளது. அடுத்து இரண்டாவது போட்டி மார்ச் 12ஆம் தேதி பெங்களூரில் பகலிரவு ஆட்டமாக தொடங்கி நடைபெறும்.
இந்த முதல் டெஸ்ட் போட்டி கோலியின் 100ஆவது டெஸ்ட் போட்டியாகும். இரண்டு வருடங்களாகச் சதம் அடிக்காமல் இருந்து வரும் இவர், இந்த 100ஆவது டெஸ்டில் சதமடித்து, விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இலங்கை அணியில் அனுபவமில்லா பௌலர்கள் அதிகம் இருப்பதால், அதற்கு வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.
இந்நிலையில், இப்போட்டியில் கோலி 38 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் லெஜண்ட்ஸ் லிஸ்டில் இணைந்துவிடுவார் என்பது தற்போது தெரியவந்துள்ளது. கோலி 8000 ரன்களை தொட இன்னும் 38 ரன்கள் மட்டுமே தேவை. இதற்குமுன் இந்திய அணியில் சச்சின் டெண்டுல்கர், ராகுல் திராவிட், சுனில் கவாஸ்கர், விரேந்தர சேவாக், விவிஎஸ் லக்ஷ்மன் ஆகிய 5 பேர் மட்டுமே 8000 ரன்களை அடித்துள்ளனர்.
அதுமட்டுமல்ல, இந்த 38 ரன்களை முதல் இன்னிங்ஸிலேயே அடித்துவிட்டால், அதிவேகமாக டெஸ்டில் 8000 ரன்களை அடித்த 5ஆவது இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்துவிடுவார். இதற்குமுன் சச்சின் 154 இன்னிங்ஸில் 8000 ரன்களை அடித்ததே சாதனையாக இருந்தது. திராவிட் (158 இன்னிங்ஸ்), சேவாக் (160 இன்னிங்ஸ்), கவாஸ்கர் (166 இன்னிங்ஸ்) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் இருக்கிறார்கள். லக்ஷ்மனை பின்னுக்குத்தள்ளி கோலி (168 இன்னிங்ஸ்) ஐந்தாவது இடத்தைப் பிடித்து விடுவார்.
2021ஆம் ஆண்டிற்கு பிறகு கோலி, இந்தியாவில் 5 டெஸ்ட்களில் பங்கேற்று 26 சராசரியுடன் 208 ரன்கை மட்டுமே எடுத்துள்ளார். அதில் 8 இன்னிங்ஸ்களில் 3 முறை டக் அவுட் ஆகியுள்ளார்.
கடந்த முறை இலங்கை அணி இந்தியா வந்தபோது கோலி 3 டெஸ்ட் போட்டிகளில் 610 ரன்களை குவித்திருந்தார். அதில் தொடர்ச்சியாக இரண்டு முறை இரட்டை சதங்களை அடித்திருந்தார் (நாக்பூரில் 213, டெல்லியில் 243). இந்நிலையில், இம்முறையும் இலங்கைக்கு எதிராக அதிரடி காட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் முதல் போட்டியில் 50% பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.