BAN vs IRE, 3rd ODI: அயர்லாந்தை வீழ்த்தி தொடரை வென்றது வங்கதேசம்!
அயர்லாந்து அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 மற்றும் ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. முதலில் ஒருநாள் தொடர் நடந்தது. முதல் ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி 183 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகித்த நிலையில், 2ஆவது ஒருநாள் போட்டி மழையால் முடிவு எட்டப்படவில்லை.
இந்நிலையில் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடந்தது. தொடரின் முடிவை தீர்மானிக்கும் இந்த கடைசி போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி வீரர்கள் தொடக்கம் முதலே சொற்ப ரன்களுக்கு சீரான இடைவெளியில் மளமளவென ஆட்டமிழந்தனர்.
அந்த அணியில் அதிகபட்சமாக காம்ஃபெர் 36 ரன்களும், டக்கெர் 28 ரன்களும் அடித்தனர். மற்ற அனைவருமே ஒற்றை இலக்கத்திலோ அல்லது ரன்னே அடிக்காமலோ வெளியேறியதால் 28.1 ஓவரில் வெறும் 101 ரன்களுக்கு ஆல் அவுட்டானது அயர்லாந்து அணி.
இதையடுத்து 102 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய வங்கதேச அணியின் தொடக்க வீரர்கள் லிட்டன் தாஸ் மற்றும் தமிம் இக்பால் ஆகிய இருவரும் இணைந்து அடித்து விளையாடி வெறும் 13.1 ஓவரில் இலக்கை அடித்துவிட்டனர். லிட்டன் தாஸ் 38 பந்தில் 50 ரன்களும், தமிம் இக்பால் 41 ரன்களும் அடிக்க, 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற வங்கதேச அணி 2-0 என ஒருநாள் தொடரை வென்றது.