புத்தாண்டில் சதமடித்தது சிறப்பு வாய்ந்த உணர்வு - டேவன் கான்வே!
நியூசிலாந்து - வங்கதேசம் அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் பே ஓவல் மைதானத்தில் இன்று (சனிக்கிழமை) தொடங்கியது. டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
அதான்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் அதிகபட்சமாக டேவன் கான்வே 122 ரன்களைச் சேர்த்தார்.
இதன்மூலம் டேவன் கான்வே டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது இரண்டாவது சதத்தை எட்டினார். இதன்மூலம், புத்தாண்டின் முதல் சதம் அடித்த வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
இந்நிலையில் சதமடித்தது குறித்து பேசிய கான்வே, “இது மிகவும் சிறப்பு வாய்ந்த உணர்வு. இப்போட்டியின் முதல் நாளிலேயே சதமடித்தது மகிழ்ச்சியாக உள்ளது. அதுமட்டுமில்லாமல் வருடத்தின் முதல் நாளை இப்படி தொடங்கியிருப்பதில் பெருமைக்கொள்கிறேன்.
நான் அந்த மைல்கல்லை எட்டியபோது என்னுடன் நடுவில் ராஸ் டெய்லர் இருப்பது ஒரு பெரிய உணர்வாக இருந்தது. ஏனெனில் சதமடித்ததை நான் அவருடன் பகிர்ந்துகொண்டேன். அது என் நினைவில் நீண்ட காலம் நிலைத்திருக்கும்” என்று தெரிவித்தார்.