சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை நிகழ்த்திய ஆரோன் ஜான்சன்!

Updated: Wed, Jun 12 2024 10:05 IST
Image Source: Google

பாகிஸ்தான் மற்றும் கனடா அணிகளுக்கு இடையேயான ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டி நேற்று நடைபெற்றது. நியூயார்க்கில் உள்ள நசாவ் கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசாம் முதலில் பந்துவீசுவதாக அறிவித்து கனடா அணியை பேட்டிங் செய்ய அழைதார். அதன்படி கனடா அணியில் தொடக்க வீரர் ஆரோன் ஜான்சனைத் தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.

ஆனாலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஆரோன் ஜான்சன் அரைசதம் கடந்ததுடன், 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 52 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் கனடா அணி 7 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்களைச் சேர்த்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் முகமது அமீர், ஹாரிஸ் ராவுஃப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணிக்கு முகமது ரிஸ்வான் - சைம் அயூப் இணை தொடக்கம் கொடுத்தனர். 

இதில் சைம் அயூப் 6 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் ரிஸ்வானுடன் இணைந்த பாபர் ஆசாமும் 33 ரன்களில் விக்கெட்டை இழந்த நிலையில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த முகமது ரிஸ்வான் அரைசதம் கடந்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் கனடாவை வீழ்த்தியதுடன், நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் தங்களது முதல் வெற்றியையும் பதிவுசெய்து அசத்தியுள்ளது. 

இப்போட்டியில் கனடா அணி தோல்வியைத் தழுவினாலும், அந்த அணியின் தொடக்க வீரர் ஆரோன் ஜான்சன் சாதனை ஒன்றை படைத்துள்ளார். இப்போட்டியில் 4 சிக்ஸர்களை விளாசிய ஆரோன் ஜான்சன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது 50 சிக்ஸர்களை கடந்து அசத்தினார். இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 50 சிக்ஸர்கள் அடித்த வீரர் எனும் சாதனையை ஆரோன் ஜான்சன் படைத்துள்ளார். 

இதற்கு முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் எவின் லூயிஸ் 20 இன்னிங்ஸின் 50 சிக்ஸர்களை அடித்ததே சாதனையாக இருந்த நிலையில், அதனைத் தற்போது 19 இன்னிங்ஸ்களிலேயே 50 சிக்ஸர்களை விளாசி ஆரோன் ஜான்சன் புதிய சாதனை படைத்துள்ளார். கனடா அணிக்காக 2022ஆம் ஆண்டு அறிமுகமான ஆரோன் ஜான்சன் 19 இன்னிங்ஸில் விளையாடி 2 சதம், 6 அரைசதங்கள் என 802 ரன்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அதிவேகமாக 50 சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் (டி20ஐ)

  • 19 இன்னிங்ஸ் - ஆரோன் ஜான்சன் (கனடா)
  • 20 இன்னிங்ஸ் - எவின் லூயிஸ் (வெஸ்ட் இண்டீஸ்)
  • 21 இன்னிங்ஸ் - முஹம்மது வசீம் (யுஏஇ)
  • 22 இன்னிங்ஸ் - ஹஸ்ரத்துல்லா ஸஸாய் (ஆஃப்கானிஸ்தான்)
  • 22 இன்னிங்ஸ் - சபர் ஸாகில் (பெல்ஜியம்)
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை