எனது மகிழ்ச்சியை ஐபிஎல் கெடுத்துவிட்டது - டி வில்லியர்ஸ் ஓபன் டாக்!
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக வலம் வந்த ஏ.பி.டிவில்லியர்ஸுக்கு ஐபிஎல் தொடரில் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அதிரடி ஆட்டங்களுக்கு பஞ்சமே வைக்காத டி வில்லியர்ஸை இந்திய ரசிகர்கள் மிஸ்டர் 360 டிகிரி என்ற அடைமொழியுடனும் அழைத்து வந்தனர்.
ஆர்சிபி அணிக்கு விராட் கோலி ஒரு தூண் என்றால், மற்றொரு தூணாக டிவில்லியர்ஸ் இருந்தார். ஆனால் கடந்தாண்டு ஐபிஎல் தொடருடன் அவர் திடீரென ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட்டார். கடந்த 2018ஆம் ஆண்டே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற அவர், கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் தனது அதிரடியால் மீண்டும் தென் ஆப்பிரிக்காவின் உலகக்கோப்பை அணியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அதற்கு ஏமாற்றமே மிஞ்சியது. மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தியதால் அவர் தனது ஓய்வை அறிவித்து வெளியேறினார். இந்நிலையில் தனது மகிழ்ச்சியை ஐபிஎல் 2021ஆம் ஆண்டு தொடர் தான் கெடுத்துவிட்டதாக டிவில்லியர்ஸ் கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “என்னைப் பொறுத்தவரை கிரிக்கெட்டில் சில நேரங்கள் மட்டும் கடினமானதாக இருக்கலாம். ஆனால் நான் மகிழ்ச்சியாகவும், உற்சாகத்துடனும் இருந்தால் மட்டுமே கிரிக்கெட் விளையாடுவேன். அது ஐபிஎல் 2021இல் எனக்கு இல்லை.
மகிழ்ச்சியுடன் விளையாட வேண்டிய கிரிக்கெட்டை கடினமாக்கிவிட்டார்கள். ஒவ்வொரு ஆண்டும் இரண்டரை மாதங்கள் பயணத்திலேயே இருக்க வேண்டும். குறிப்பாக 2021ஆம் ஆண்டு மிக மோசம். பயோ பபுள், குவாரண்டைன் என மகிழ்ச்சியே போய்விட்டது. அதுவும் 2 பகுதிகளாக பிரித்துவிட்டதால், கூடுதல் சிரமம் ஏற்பட்டது. இதனால் தான் இனி ஐபிஎல் தொடரிலும் விளையாடக்கூடாது என முடிவெடுத்து விலகினேன்” என தெரிவித்துள்ளார்.
கடந்த 2011ஆஅம் ஆண்டு முதல் ஆர்சிபி அணிகாக விளையாடி வந்த டிவில்லியர்ஸ் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றுக்கொடுத்துள்ளார். அவருக்கு மாற்று வீரரை ஐபிஎல் மெகா ஏலத்தில் தேடிப்பிடிக்க வேண்டிய கட்டாயத்தில் அந்த அணி உள்ளது. தற்போதைக்கு கேப்டன் விராட் கோலி, மேக்ஸ்வெல், முகமது சிராஜ் என 3 பேரை மட்டும் தக்கவைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.