பவுண்டரி எல்லையில் அசாத்தியமான கேட்சைப் பிடித்த ஏபிடி வில்லியர்ஸ் - காணொளி!
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்களுக்காக நடத்தப்பட்டு வரும் உலக லெஜண்ட்ஸ் சாம்பியன்ஷிப் லீக் கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் இந்தியா சாம்பியன்ஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் அணியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் ஏபி டி வில்லியர்ஸ் அரைசதம் கடந்து அசத்தியதுடன் 3 பவுண்டரி, 4 சிக்ஸர்களுடன் 63 ரன்களையும், ஜேஜே ஸ்மட்ஸ் 30 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் பியூஷ் சாவ்லா, யுசுஃப் பதான் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
அதன்பின் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்தியா சாம்பியன்ஸ் அணியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஸ்டூவர்ட் பின்னி 37 ரன்களையும், சுரேஷ் ரெய்னா 16 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் இந்தியா சாம்பியன்ஸ் அணி 18.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 111 ரன்களுக்கு ஆல் அவுட்டானதுடன் 88 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஏபிடி வில்லியர்ஸ் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் இப்போட்டியில் ஏபிடி வில்லியர்ஸ் பிடித்த ஒரு கேட்சானது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதன்படி இன்னிங்ஸின் 8ஆவது ஓவரை இம்ரான் தாஹிர் வீசிய நிலையில், அந்த ஓவரைன் முதல் பந்தை எதிர்கொண்ட யுசுஃப் பதான் லாங் ஆன் திசையில் சிக்ஸர் அடிக்க முயன்று தூக்கி அடித்தார்.
Also Read: LIVE Cricket Score
அப்போது அத்திசையில் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த ஏபி டி வில்லியர்ஸ் சிக்ஸருக்கு சென்ற பந்தை தாவிபிடித்த நிலையில், பவுண்டரி கோட்டை தொடுவதற்கு முன் மீண்டும் களத்தில் பந்தை தூக்கி எறிந்தார். அச்சமயம் சக வீரர் சாரல் எர்வியும் அருகில் இருக்க டைவ் அடித்து அந்த பந்தைப் பிடித்தார். இதனால் இப்போட்டியில் யுசுஃப் பதான் 5 ரன்களை மட்டுமே எடுத்த கையோடு ஆட்டமிழந்தார். இந்நிலையில் ஏபிடி வில்லியர்ஸின் கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.