WCL 2025: மீண்டும் ருத்ரதாண்டவமாடிய ஏபிடி வில்லியர்ஸ்; தென் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் அசத்தல் வெற்றி!
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்களுக்காக நடத்தப்பட்டு வரும் உலக லெஜண்ட்ஸ் சாம்பியன்ஷிப் லீக் கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க சாம்பியன்ஸ் அணிக்கு ஏபிடி வில்லியர்ஸ் மற்றும் ஜேஜே ஸ்மட்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் தொடக்கம் முதலே பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் பறக்கவிட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. மேற்கொண்டு இப்போட்டியில் அபாரமாக விளையாடிய ஏபிடி வில்லியர்ஸ் 39 பந்துகளில் தனது சதத்தையும் பதிவுசெய்து அசத்தினார்.
மறுபக்கம் ஜேஜே ஸ்மட்ஸும் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்தார். இதன்மூலம் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 187 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில், 15 பவுண்டரி, 8 சிக்ஸர்கள் என 123 ரன்களைச் சேர்த்த கையோடு ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய ஜேபி டுமினி 16 ரன்களுக்கும், வேன் வைக் 3 ரன்னிலும், ஹென்றி டேவிட்ஸ் ஒரு ரன்னிலும் ஆட்டமிழக்க, ஜேஜே ஸ்மட்ஸும் 10 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 85 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
இதன் காரணமாக தென் ஆப்பிரிக்க சாம்பியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்களைக் குவித்தது. ஆஸ்திரேலியா சம்பியன்ஸ் தரப்பில் பீட்டர் சிடில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதன்பின் இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியளிக்கும் வகையில் தொடக்க வீரர் கிறிஸ் லின் இன்னிங்ஸின் முதல் பந்திலேயே தனது விக்கெட்டை இழந்தார்.
அவரைத்தொடர்ந்து ஷார் மார்ஷ் 18 ரன்னிலும், டி ஆர்சி ஷார்ட் 13 ரன்னிலும், டேனியல் கிறிஸ்டியன் ரன்கள் ஏதுமின்றியும், பென் டங்க் 15 ரன்களிலும், கலம் ஃபெர்குசன் 15 ரன்னிலும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இறுதியில் அதிரடியாக விளையாடிய பென் கட்டிங் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்ததுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 6 பவுண்டரி, 4 சிக்ஸர்களுடன் 59 ரன்களைச் சேர்த்திருந்தார்.
Also Read: LIVE Cricket Score
ஆனால் மறுபக்கம் களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததன் காரணமாக, ஆஸ்திரேலியா சம்பியன்ஸ் அணி 16.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்க தரப்பில் ஆரோன் பங்கிசோ 4 விக்கெட்டுகளையும், இம்ரான் தாஹிர் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க சாம்பியன்ஸ் அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.