ஐபிஎல் 2022: சிஎஸ்கேவுக்கு நான்காவது தோல்வி; முதல் வெற்றியை ருசித்தது ஹைதராபாத்!
ஐபிஎல் 15ஆவது சீசனில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கி நடந்த போட்டியில் சிஎஸ்கேவும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தும் மோதின. இரு அணிகளுமே இந்த சீசனில் இதற்கு முன் ஆடிய போட்டிகள் அனைத்திலும் தோல்வியடைந்ததால் முதல் வெற்றியை எதிர்நோக்கி களமிறங்கின.
மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டன் கேன் வில்லியம்சன் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்கள் இந்த போட்டியிலாவது நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ராபின் உத்தப்பா 15 ரன்னில் வாஷிங்டன் சுந்தர் பந்தில் ஆட்டமிழந்தார். ருதுராஜ் கெய்க்வாட் 16 ரன்னில் நடராஜன் பவுலிங்கில் வீழ்ந்தார்.
27 பந்தில் 27 ரன்கள் அடித்து அம்பாதி ராயுடு ஆட்டமிழந்தார். அடித்து ஆடிய மொயின் அலி 48 ரன்களுக்கு எய்டன் மார்க்ரமின் பந்தில் அவுட்டாகி வெளியேறினார். ஷிவம் துபேவை 3 ரன்னில் நடராஜன் வீழ்த்தினார். தோனியும் 3 ரன்னில் நடையை கட்டினார். சிஎஸ்கே அணி ஒரு கட்டத்தில் மோசமான ஸ்கோர் அடிக்கும் நிலை இருந்தது. ஆனால் ஜடேஜா 15 பந்தில் 23 ரன்கள் அடிக்க, 20 ஓவரில் 154 ரன்கள் என்ற டீசண்ட்டான ஸ்கோரை அடித்தது சிஎஸ்கே.
அதன்பின் 155 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான கேன் வில்லியம்சன் வேகமாக ஸ்கோர் செய்ய முடியாமல் தட்டுத்தடுமாறி ஆடினாலும், மறுமுனையில் மற்றொரு தொடக்க வீரரான இளம் அபிஷேக் ஷர்மா அடித்து ஆடினார்.
ஆனால் திணறினாலும், விக்கெட்டை எளிதாக விட்டுக்கொடுக்காமல் வில்லியம்சன் ஆடியதால் முதல் விக்கெட்டுக்கு சன்ரைசர்ஸ் அணி 12 ஓவரில் 89 ரன்கள் அடித்தது. கேன் வில்லியம்சன் 32 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
ஆனால் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த அபிஷேக் ஷர்மா அதன்பின்னரும் சிறப்பான ஆட்டத்தை தொடர, அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ராகுல் திரிபாதியும் அதிரடியாக ஆடினார். 50 பந்தில் 75 ரன்கள் அடித்து அபிஷேக் ஷர்மா ஆட்டமிழந்தாலும், 18ஆவது ஓவரிலேயே இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி பெற்றது.