போட்டியின் போது பிரபல பாகிஸ்தான் வீரருக்கு நெஞ்சு வலி

Updated: Tue, Dec 21 2021 21:47 IST
Image Source: Google

பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தொடக்க வீரரும் 34 வயதான அபித் அலி, சர்வதேச அளவில் 16 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1,180 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் 4 சதங்களும் அடங்கும். நடந்து முடிந்த வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கூட 263 ரன்கள் சேர்த்து தொடர் நாயகன் விருதை வென்றார். 

கடந்த 2019ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் அடித்த பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்

இந்த நிலையில், கராச்சியில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட்டில் , சென்ட்ரல் பஞ்சாப் அணிக்காக அபித் அலி விளையாடிய போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. அரைசதம் கடந்த நிலையில், தம்மால் விளையாட முடியவில்லை என்று அவர் கூற, உடனடியாக மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர்

இதனையடுத்து அபித் அலி போட்டியிலிருந்து விலகி நேரடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அபித் அலியின் இதயத்திற்கு ரத்த ஓட்டம் குறைவாக செல்வதாக கூறி, அவரை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர்.

தற்போது அபித் அலி நலமுடன் இருப்பதாகவும், அவரது உடல் நலத்தை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தனர். அபித் அலியின் உடல் நலத்தை கருத்தில் கொண்டு அவரையும், அவரது குடும்பத்தினரையும் யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை