அபுதாபி டி10 லீக்:டேவிட் வஸ் அதிரடியில் இரண்டாவது முறையாக கோப்பையைத் தட்டிச்சென்றது டெக்கான் கிளாடியேட்டர்ஸ்!
டி10 லீக் கிரிக்கெட் தொடரின் 6ஆவது சீசன் இன்றுடன் நிறைவடைகிறெது. இதில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் டெக்கான் கிளாடியேட்டர்ஸ் - நியூயார்க் ஸ்டிரைக்கர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூயார்க் ஸ்டிரைக்கர்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் சுரேஷ் ரெய்னா 7 ரன்களிலும், கோஹ்லர் 11 ரன்களிலும், ஆண்ட்ரே ரஸ்ஸல் 9 ரன்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
அதன்பின் ஜோடி சேர்ந்த நிக்கோலஸ் பூரன் - டேவிட் வைஸ் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதன்மூலம் 10 ஓவர்கள் முடிவில் டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 128 ரன்களைச் சேர்த்தது.
இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டேவிட் வைஸ் 18 பந்துகளில் 43 ரன்களையும், நிக்கோலஸ் பூரன் 40 ரன்களையும் எடுத்தனர். நியூயார்க் அணி தரப்பில் அகீல் ஹொசைன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய நியூயார்க் அணியில் முகமது வாசீம் முதல் பந்திலேயே ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து 6 ரன்களில் பால் ஸ்டிர்லிங்கும், ஈயன் மோர்கன் ரன் ஏதுமின்றியும், ஆசாம் கான் 16 ரன்களிலும் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
அதன்பின் ஜோடி சேர்ந்த ஜோர்டன் தாம்சன் - கீரென் பொல்லார்ட் ஆகியோர் ஓரளவு தாக்குபிடித்து விளையாடினர். ஆனால் 23 ரன்களில் பொல்லார்ட் ஆட்டமிழந்து வெளியேற அடுத்து வந்த ரஷித் கானும் 8 ரன்களோடு வெளியேறினார்.
இதனால் 10 ஓவர்கள் முடிவில் நியூயார்க் ஸ்டிரைக்கர்ஸ் 5 விக்கெட்டுகளை இழந்து 91 ரன்களை மட்டுமே எடுத்தது. டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணி தரப்பில் ஜோஷுவா லிட்டில், முகமது ஹொஸ்னைன் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதன்மூலம் டெக்கான் கிளாடியேட்டர்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் நியூயார்க் ஸ்டிரைக்கர்ஸை வீழ்த்தி தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது.