நீண்ட நாள் காதலியை கரம்பிடித்த ஜாம்பா - பிரபலங்கள் வாழ்த்து!
ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜாம்பா. ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் சார்பாக விளையாடி வருகிறார். ஆனால், கரோனா பரவல் காரணமாக, இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 14ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் பாதியிலேயே ஜாம்பா நாடு திரும்பினார்.
இந்தியாவில் கரோனா 2-வது அலையின் காரணமாக மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக ஐபிஎல் தொடரில் விளையாடிய வீரர்களுக்கும் தொற்று பரவியது. இதையடுத்து நடப்பாண்டு ஐபிஎல் தொடர் பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டு, தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வீரர் ஆடம் ஜாம்பா தனது நீண்ட நாள் காதலியான ஹட்டி லே பால்மர் (Hattie Leigh Palmer) என்பவரை திருமணம் செய்துள்ளார். இவருக்கு கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக கரோனா தொற்று காரணமாக ஏற்கனவே 2 முறை இவர்களது திருமணம் தள்ளி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.