Asian Games 2023: பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஆஃப்கானிஸ்தான்!

Updated: Fri, Oct 06 2023 15:25 IST
Image Source: Google

ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆடவர் டி20 கிரிக்கெட் அரையிறுதிப்போட்டியில் இந்திய அணி வங்கதேச அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னாறியது. அதேசயம் இன்று நடைபெற்ற மற்றொரு அரையிறுதிப்போட்டியில் ஆஃப்கானிஸ்தான் - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் மிர்ஸா பைக் 4, ரொஹைல் 10 ரன்களுக்கும், ஹைதர் அலி 2 ரன்களிலும், காஸிம் அக்ரம் 9 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீரரான ஒமைர் யுசுபும்  24 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். 

அதனைத்தொடர்ந்து வந்த குஷ்டில் ஷா, ஆசிஃப் அலி போன்ற் அதிரடி வீரர்களும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அதன்பின் களமிறங்கிய வீரர்களும் விக்கெட்டை இழந்தனர். இதனால் பாகிஸ்தான் அணி 18 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 115 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஃப்கானிஸ்தான் தரப்பில் ஃபரீத் அஹ்மத் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணியில் தொடக்க வீரர்கள் செதியுள்ளா அடல் 5 ரன்களுக்கு, முகமது ஷஷாத் 9 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய நூர் அலி ஸத்ரான் ஒருபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த மறுபக்கம் களமிறங்கிய அஃப்சர் ஸஸாய், கரிம் ஜானத், ஷாஹிதுல்லா கமல் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். 

அதனைத்தொடர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய நூர் அலி ஸத்ரானும் 39 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய கேப்டன் குல்பதில் நைப் அதிரடியாக விளையாடி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் ஆஃப்கானிஸ்தான் அணி 17.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 4 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றிப்பெற்றது. 

இதன்மூலம் ஆஃப்கானிஸ்தான் அணி ஆசிய விளையாட்டு போட்டிகளில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது. இதையடுத்து நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி பலம் வாய்ந்த இந்திய அணியை எதிர்கொள்ளவுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை