எங்கள் மீது நம்பிக்கை வைத்த பிரையன் லாராவை நாங்கள் ஏமாற்றவில்லை - ரஷித் கான்!
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரில் வங்கதேச அணியை வீழ்த்தி ஆஃப்கானிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறி வரலாறு படைத்துள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 115 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக குர்பாஸ் 43 ரன்கள் அடித்தார். வங்கதேசம் தரப்பில் ரிஷாத் ஹொசைன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 116 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேச அணி, ஆஃப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. அந்த அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களான தன்ஸித் ஹசன் மற்றும் ஷகிப் அல் ஹசன் ஆகியோர் டக் அவுட்டிலும், கேப்டன் ஷண்டோ 5 ரன்களிலும், சவுமியா சர்கார் 10 ரன்களிலும் ஆட்டமிழந்து அணிக்கு ஏமாற்றத்தை அளித்தனர். இதனிடையே 2 முறை மழை குறுக்கிட்ட காரணமாக ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. இதனால் வங்கதேச அணிக்கு 19 ஓவர்களில் 114 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற இலக்கு மாற்றியமைக்கப்பட்டது.
ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் தொடக்க ஆட்டக்காரர் லிட்டன் தாஸ் நிலைத்து விளையாடி அணியை இலக்கை நோக்கி நெருங்க வைத்தார். அரை சதம் அடித்து அசத்திய அவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்து போராடியும் அணியை வெற்றி பெற வைக்க முடியவில்லை. இதனால் வங்கதேச அணி 17.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 105 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஃப்கானிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறி வரலாறு படைத்துள்ளது.
முன்னதாக இந்த டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்னதாக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னாள் வீரர்கள் எந்தெந்த அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறும் என்பது குறித்து தங்களது கணிப்பை தெரிவித்திருந்தனர். இதில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் பிரையன் லாரா, அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறும் அணிகளில் ஆஃப்கானிஸ்தானின் பெயரையும் சேர்த்திருந்தார். இந்நிலையில் தற்போது ஆஃப்கானிஸ்தான் அணியும் அவர் கணித்ததைப் போலவே நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து பேசிய ஆஃப்கானிஸ்தான் அணி கேப்டன் ரஷித் கான், “நாங்கள் அரையிறுதிக்கு முன்னேறுவோம் என கணித்த ஒரே ஒரு நபர் பிரையன் லாரா மட்டும்தான். அவர் எங்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையை நாங்கள் ஏமாற்றவில்லை. இந்த தொடரின் வரவேற்பு விருந்தின் போது அவரை சந்திக்கும வாய்ப்பை பெற்றோம். அப்போது நான் அவரிடம், ‘நான் உங்கள் கணிப்பை நனவாக்குவோம்’ எனசொல்லி இருந்தேன். தற்போது அவரது கணிப்பு சரி என்பதை நாங்கள் நிரூபித்துக் காட்டி உள்ளோம். இதனால் எங்கள் அணியை நினைத்து நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.