உலகக்கோப்பை தொடருடன் ஓய்வை அறிவித்த நவீன் உல் ஹக்!

Updated: Wed, Sep 27 2023 22:12 IST
Image Source: Google

இந்தியாவில் வரும் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19ஆம் தேதி வரை ஐசிசியின் ஒருநாள் உலக கோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இத்தொடருக்காக அனைத்து அணிகள்ம் தீவிரமாக தயாராகி வருகின்றன. அந்த வரிசையில் இந்தியாவின் அண்டை நாடான ஆஃப்கானிஸ்தான் சமீபத்தில் இலங்கை மண்ணில் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரில் 3 – 0 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது.

அதை தொடர்ந்து நடைபெற்ற 2023 ஆசிய கோப்பை தொடரில் மிகச் சிறப்பாக விளையாடிய அந்த அணி லீக் சுற்றில் போராடி தோல்வியை சந்தித்து வெளியேறியது. இதையடுத்து நடைபெறும் உலகக் கோப்பையில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ள அந்த அணியினர் தற்போது வலைப்பயிற்சிகளை தொடங்கியுள்ளனர். இந்த சூழ்நிலையில் உலகக்கோப்பை தொடருடன் சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக ஆஃப்கானிஸ்தான் வீரர் நவீன்-உல்-ஹக் அதிரடியாக அறிவித்துள்ளார்.

இத்தனைக்கும் வெறும் 24 மட்டுமே நிரம்பிய வலது கை வேகப்பந்து வீச்சாளரான அவர் கடந்த 2016ஆம் ஆண்டு சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 14 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இருப்பினும் நிலையான இடம் பிடிக்கும் அளவுக்கு சிறப்பாக செயல்படாத அவர் 2023 ஆசிய கோப்பை தொடருக்கான ஆஃப்கானிஸ்தான் அணியில் தேர்வு செய்யப்படவில்லை.

இந்நிலையில் தம்முடைய கேரியரை நீட்டிப்பதற்காக 2023 உலகக் கோப்பையுடன் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். கடைசியாக கடந்த 2021ஆம் ஆண்டு கிரிக்கெட்டில் விளையாடியிருந்த அவர் ஐபிஎல் தொடரில் லக்னோ அணியில் முதன்மை பந்துவீச்சாளராக விளையாடி வருகிறார். குறிப்பாக இந்த வருடம் இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலியிடம் அவர் சண்டை போட்டது உலக அளவில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

 

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இதுவரை 27 போட்டிகளில் 34 விக்கெட்களை எடுத்துள்ள அவருக்கு பெரும்பாலும் ஒருநாள் போட்டிகளில் வாய்ப்பு கிடைப்பதில்லை. எனவே தொடர்ந்து ஐபிஎல் தொடரிலும் சர்வதேச டி20 கிரிக்கெட்டிலும் விளையாடி தம்முடைய கேரியரை நீட்டிப்பதற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறியுள்ள அவர் இத்தனை நாட்களாக ஆதரவு கொடுத்த ஆஃப்கானிஸ்தான் வாரியத்திற்கும் ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

இருப்பினும் அவரின் இந்த அறிவிப்பு ஆஃப்கானிஸ்தான் ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றமாக அமைந்துள்ளது என்றே சொல்லலாம். இதைத் தொடர்ந்து அக்டோபர் 6ஆம் தேதி தர்மசாலாவில் நடைபெறும் தங்களுடைய முதல் போட்டியில் வங்கதேச அணியை ஆஃப்கானிஸ்தான் எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை