ZIM vs AFG, 1st T20I: ஸத்ரான், ஸஸாய் அதிரடியில் ஆஃப்கானிஸ்தான் வெற்றி!
ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஃப்கானிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை ஆஃப்கானிஸ்தான் அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி ஜிம்பாப்வேவை ஒயிட்வாஷ் செய்தது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி ஹராரேவில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது.
அதன்படி களமிறங்கிய அந்த அணியில் இன்னசெண்ட் கையா, கேப்டன் கிரேக் எர்வின் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த மதவெரே - சகாப்வா இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர்.
பின் 32 ரன்களில் மதவெரே ஆட்டமிழக்க, 29 ரன்களில் சகாப்வாவும் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய மில்டன் ஷும்பாவும் ஒரு ரன்னோடு வெளியேறினார். ஒரு முனையில் விக்கெட்டுகளை சரிந்தாலும் மறுமுனையில் அதிரடியாக விளையாடிய சிக்கந்தர் ரஸா 45 ரன்களைச் சேர்த்து அசத்தினார்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ஜிம்பாப்வே அணி 8 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களைச் சேர்த்தது. ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் நிஜாத் மசூத் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து இலக்கை துரத்திய ஆஃப்கானிஸ்தான் அணிக்கு ஹஸ்ரதுல்லா ஸஸாய் - ரஹ்மனுல்லா குர்பாஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் குர்பாஸ் 33 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஹஸ்ரதுல்லா ஸஸாய் 45 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
அதன்பின் களமிறங்கிய உஸ்மான் கானி ஒரு ரன்னிலும், தர்வீஸ் ரசூலி 11 ரன்களோடும் பெவிலியன் திரும்பினர். பின்னர் ஜோடி சேர்ந்த நஜிபுல்லா ஸத்ரான் - முகமது நபி இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.
இதன்மூலம் 19.2 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டிய ஆஃப்கானிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேவை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது.