ஜிம்பாப்வேவை வீழ்த்தி தொடரை சமன் செய்தது ஆஃப்கானிஸ்தான்!

Updated: Mon, Mar 15 2021 11:30 IST
Image Source: Google

ஆஃப்கானிஸ்தான், ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவருகிறது. இரு அணிகளுக்கும் இயையேயான இரண்டாவது டெஸ்ட் தொடர் மார்ச் 10ஆம் தேதி தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவுசெய்து களமிறங்கியது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஃப்கானிஸ்தான் அணியில் ஹஸ்மத்துல்லா ஷாஹிதி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் இரட்டைச் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அணியின் கேப்டனான ஆஸ்கர் ஆஃப்கானும் தனது பங்கிற்கு 164 ரன்களைச் சேர்த்தார்.

இதன் மூலம் ஆஃப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 545 ரன்களைச் சேர்த்து டிக்ளர் செய்தது. அணியில் அதிகபட்சமாக ஹஸ்மத்துல்லா ஷாஹிதி 200 ரன்களை சேர்த்தார். 


இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஜிம்பாப்வே அணியில் மஸ்வௌரே, ஷிகந்தர் ரஸா இணை அரைசதம் அடித்து அணிக்கு கைகொடுத்தது. இருப்பினும், மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால், அந்த அணி 287 ரன்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, ஃபாலோ ஆன் ஆனாது.

பிறகு இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய ஜிம்பாப்வே அணிக்கும் கேப்டன் சியான் வில்லியம்ஸ் 151 ரன்களை குவித்து அணியை முன்னிலைப் படுத்தினார். இதன் மூலம் ஜிம்பாப்வே அணி இரண்டாவது இன்னிங்ஸில் 365 ரன்களைச் சேர்த்தது. மேலும் 108 ரன்களை இலக்காகவும் நிர்ணயித்தது. இந்த இன்னிங்ஸில் ஆஃப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் ரஷித் கான் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

இதையடுத்து, வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய ஆஃப்கானிஸ்தான் அணிக்கு ரமத் ஷா அரைசதம் கடந்து அணியை வெற்றிபெறச் செய்தார். இதன் மூலம் ஆஃப்கானிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன்செய்தது.

இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய ஹஸ்மத்துல்லா ஷாஹிதி ஆட்டநாயகானாகவும், ஜிம்பாப்வே அணியின் கேப்டன் சியான் வில்லியம்ஸ் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

அதிகம் பார்க்கப்பட்டவை