இந்தியாவுடான போட்டியை பாகிஸ்தான் புறக்கணிக்க வேண்டும் - காம்ரன் அக்மல்!

Updated: Thu, Oct 20 2022 12:00 IST
After BCCI's refusal to travel Pakistan, Kamran Akmal calls for Men in Green to boycott upcoming T20 (Image Source: Google)

அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வேறு நாட்டிற்கு மாற்றப்படும் என்று ஜெய்ஷா பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பை போட்டியை பாகிஸ்தான் புறக்கணிக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ள இந்தியாவுக்கு எதிரான டி20 உலக கோப்பை ஆட்டத்தை பாகிஸ்தான் புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

இதுகுறித்து பேசிய பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் கம்ரான் அக்மல், “ஜெய்ஷாவின் இந்த பேச்சை நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. ஏனென்றால் அவர், இந்தியா பாகிஸ்தான் கடந்த முறை ஆசிய கோப்பையில் விளையாடிய போது அவர் மைதானத்தில் நேரில் வந்து பார்த்தார். ஜெய்ஷா அவருடைய அரசியலை எதிர்க்கட்சியினரிடையே மட்டும் தான் காட்ட வேண்டும்.

அது தவிர விளையாட்டில் அரசியலை கலக்கக்கூடாது. ஆசிய கோப்பை திட்டமிட்டபடி பாகிஸ்தானில் தான் நடைபெற வேண்டும்.அப்படி இல்லை என்றால் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ள இந்தியா பாகிஸ்தான் போட்டியில் பாகிஸ்தான் பங்கேற்காமல் வெளிநடப்பு செய்ய வேண்டும் .இதேபோன்று எவ்வித ஐசிசி போட்டியிலும் பாகிஸ்தான் இந்தியாவுடன் மோத கூடாது” என்று கம்ரான் அக்மல் வலியுறுத்தியுள்ளார்.

கம்ரான் அக்மலின் இந்த கோரிக்கை தற்போது பெரும் புயலை கிளப்பியுள்ளது. ஆசிய கோப்பை கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தை உடனே கூட்டி ஜெய்ஷாவின் பேச்சு குறித்து முடிவெடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கெடு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இல்லையேனில் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ள இந்தியாவுக்கு எதிரான போட்டியில் இருந்து விலக பாகிஸ்தான் முடிவு எடுக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஒருவேளை பாகிஸ்தான் அவ்வாறு செய்தால் அது சர்வதேச கிரிக்கெட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும். இதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்றாலும் அவ்வாறு பாகிஸ்தான் வெளிநடப்பு செய்தால் இந்தியாவுக்கு இரண்டு புள்ளிகள் கிடைக்கும். எனினும் அன்றைய தினம் மெல்போர்னில் மழை பெய்ய 90 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணிக்கப்பட்டுள்ளது.இதனால் இந்தியா பாகிஸ்தான் போட்டி கைவிடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை