ஐபிஎல் 2022: சஹலை தொங்க விட்ட வீரர்.. "தடை பண்ணுங்க".. சாஸ்திரி ஆவேசம்! 

Updated: Sat, Apr 09 2022 13:48 IST
Image Source: Google

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருபவர் யுஸ்வேந்திர சஹல். இவரும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இன்னொரு வீரரான கருண் நாயரும், ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு ஒரு பேட்டி அளித்திருந்தனர். இந்த பேட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் டிவிட்டர் தளத்தில் வெளியிடப்பட்டிருந்தது.

அந்தப் பேட்டியில் அதிர்ச்சிகரமான ஒரு தகவலை வெளியிட்டிருந்தார் சஹல். அதாவது 2013ஆம் ஆண்டு சஹல், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார். அப்போது பெங்களூரில் நடந்த ஒரு போட்டிக்குப் பின்னர் ஹோட்டலில் பார்ட்டி நடந்தது. அந்தப் பார்ட்டியின்போது சக வீரர் ஒருவர் நல்ல குடிபோதையில் இருந்துள்ளார். அவர் சஹலை, அப்படியே பிடித்து 15ஆவது மாடியிலிருந்து தொங்க விட்டு விளையாடியுள்ளார்.

அந்த வீரரின் இந்த குடிகார செயலால் அதிர்ச்சி அடைந்து உயிருக்குப் போராடியுள்ளார் சஹல். பின்னர் மற்ற வீரர்கள் வந்து சஹலை பத்திரமாக மீட்டு அவரை சகஜ நிலைக்குக் கொண்டு வந்தனர். இந்த சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களிடம் மட்டுமல்லாமல் வீரர்களிடமும் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து டிவீட் போட்டுள்ள வீரேந்திர ஷேவாக், “அந்த வீரரின் பெயரை சஹல் வெளியிட வேண்டும். இது சாதாரண விஷயமில்லை. மிகவும் சீரியஸான விஷயம் ”என்று கூறியுள்ளார். தற்போது முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் இதேபோன்ற கோரிக்கையை வெளியிட்டுள்ளார்.

அவர் இதுகுறித்துக் கூறுகையில், “இது வேடிக்கையான விஷயம் அல்ல. மிகவும் கவலைக்குரிய ஒன்று. மிகவும் சீரியஸான பிரச்சினை. ஒரு வீரர் இதுபோன்ற மன நிலையில் இருந்தது விபரீதமானதும் கூட. அவருக்கு விளையாடுவதிலிருந்து ஆயுள் கால தடை விதிக்க வேண்டும்.

இது சிரிப்புக்குரிய விஷயம் கிடையாது. யார் அந்த வீரர் என்று எனக்குத் தெரியவில்லை. அவர் நிச்சயம் நல்ல மன நிலையில் இல்லை. அப்படிப்பட்டவர்களால் விபரீதமே நேரிடும். அடுத்தவர் உயிருடன் விளையாடுவது காமெடியான செயல் அல்ல. அதை வேடிக்கையாக யாரும் எடுத்துக் கொள்ளவும் முடியாது. சிறு தவறு கூட ஒருவரின் உயிரைப் பறித்து விடும். தவறுகள் நடக்கவே நடக்காது என்று கூற முடியாது. அந்த இருவரில் யார் தவறு செய்திருந்தாலும் உயிர் போய் விடும். இதை ஏற்றுக் கொள்ளவே முடியாது .

இதுபோன்ற விபரீதமான சம்பவத்தை நான் முதல் முறையாக கேள்விப்படுகிறேன். இப்படிப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்ட நபரை தொடர்ந்து விளையாட அனுமதிக்கக் கூடாது. ஆயுள் கால தடை மட்டும் போதாது. அவரை மன நல ஆலோசனைக்கு அனுப்பி வைக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

சஹல், அந்த முரட்டு வீரரின் பெயரை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருவதால் அந்த நபரின் பெயரை சஹல் வெளியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. குறைந்தபட்சம் அவர் இந்திய வீரரா அல்லது வெளிநாட்டு வீரரா என்ற தகவலையாவது சஹல் வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை