ஐபிஎல் 2022: ஹர்திக் தலைமையிலான அகமதாபாத் அணியின் பெயர் அறிவிப்பு!
இந்தியாவில் அடுத்த மார்ச் மாதம் இறுதியில் ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் ஆனது நடைபெற உள்ளது. ஏற்கனவே 14 சீசன்கள் முடிவடைந்த நிலையில் தற்போது 15-ஆவது ஐபிஎல் தொடருக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அதன்படி ஏற்கனவே விளையாடி வரும் 8 அணிகளுடன் அகமதாபாத் மற்றும் லக்னோ ஆகிய நகரங்களை தலைமையாகக் கொண்டு இரு அணிகள் புதிதாக இந்த தொடரில் இணைந்துள்ளன.
இதில் ஏற்கனவே அகமதாபாத் மற்றும் லக்னோ அணிகள் தங்களது அணியில் தேர்ந்தெடுக்கப்பட்ட 3 வீரர்களை அறிவித்த வேளையில் அடுத்ததாக மெகா ஏலத்திலும் கலந்து கொள்ள இருக்கின்றனர். இந்நிலையில் முன்னதாக லக்னோ அணியானது அந்த அணியின் பெயரையும் லோகோவையும் வெளியிட்ட வேளையில் தற்போது அகமதாபாத் அணி தங்களது அணியின் பெயரை வெளியிட்டுள்ளது.
மும்பை அணியில் இருந்து வெளியேறிய ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியாவை கேப்டனாக தேர்ந்தெடுத்த அகமதாபாத் அணி, சுழற்பந்து வீச்சாளரான ரஷீத் கானையும், கொல்கத்தா அணியில் இருந்து வெளியேறிய சுப்மன் கில்லை அணியில் தேர்வு செய்துள்ளது.
இந்நிலையில் அகமதாபாத் அணி தங்களது அணியின் பெயரை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. அதன்படி அகமதாபாத் அணியின் பெயராக“குஜராத் டைட்டன்ஸ்” என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக அகமதாபாத் டைட்டன்ஸ் என பெயர் சூட்டப்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில் தற்போது அதனை குஜராத் டைட்டன்ஸ் என பெயரிடப்பட்டுள்ளது.
அதோடு அவர்களது அணியின் லோகோவையும் இன்று அந்த அணி நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவிக்க உள்ளது.