இது எப்போதும் பெருமைக்குரிய தருணம் - புவனேஷ்வர் குமார்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4ஆவது டி20 ஆட்டத்தில் இந்தியா 82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 5-வது டி20 ஆட்டம் பெங்களூரில் நேற்று நடைபெற்றது. இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 3.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 28 ரன்கள் எடுத்த நிலையில் மழை காரணமாக ஆட்டம் தடைபட்டது.
மழை தொடர்ந்து பெய்ததால் ஆட்டம் கைவிடப்பட்டது. டி20 தொடர் 2-2 என சமனில் முடிந்தது. தொடர் நாயகன் விருதை இந்திய வேகப் பந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமார் வென்றுள்ளார். அவர் 6 விக்கெட்டுகள் எடுத்தார்.
சர்வதேச கிரிக்கெட்டில் அதிகமுறை தொடர் நாயகன் விருதை வென்ற இந்திய வேகப் பந்துவீச்சாளர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் புவனேஸ்வர் குமார். இதற்கு முன்பு ஜாகீர் கானுடன் இணைந்து முதலிடத்தில் இருந்தார்.
சர்வதேச கிரிக்கெட்டில் அதிகமுறை தொடர் நாயகன் விருதை வென்ற இந்திய வேகப் பந்துவீச்சாளர்கள்
- புவனேஸ்வர் குமார் - 4
- ஜாகீர் கான் - 3
- இஷாந்த் சர்மா - 3
மேலும் டி20 கிரிக்கெட்டில் இருமுறை தொடர் நாயகன் விருதை வென்ற ஒரே இந்திய வேகப் பந்துவீச்சாளரும் புவனேஸ்வர் குமார் தான். இதற்கு முன்பு 2018இல் தென்னாப்பிரிக்காவில் இவ்விருதை முதல்முறையாக வென்றார்.
இதுகுறித்து பேசிய அவர், “தொடர் ஆட்டக்காரர் விருதைப் பெற்றதில் உண்மையிலேயே பெருமைப்படுகிறேன். நீங்கள் ஒரு பந்துவீச்சாளர் அல்லது பேட்ஸ்மேன் என்பது முக்கியமில்லை. ஆனால் நீங்கள் தொடர் நாயகன் விருதைப் பெறும்போது, அது எப்போதும் பெருமைக்குரிய தருணம், மற்றும் டி20யில் பந்துவீச்சாளராக, அது எப்போதும் சிறப்பாக இருக்கும்.
உடல் நன்றாக இருக்கிறது, ஆனால் அதைப் பற்றி அதிகம் பேச விரும்பவில்லை. எனது பந்துவீச்சாக இருந்தாலும் சரி, உடற்தகுதியாக இருந்தாலும் சரி, மீண்டும் வலிமை பெறுவதில் நான் எப்போதும் கவனம் செலுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.