மஞ்ச்ரேக்கரின் சர்ச்சை கருத்துக்கு கர்ட்லி அம்ப்ரோஸின் பதிலடி!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்காக, தற்போது இங்கிலாந்தில் முகாமிட்டுள்ள இந்திய அணி, தற்போது பயிற்சியை தொடங்க ஆரம்பித்துள்ளன.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், இந்தியா - நியூசிலாந்து அணிகள் விளையாடவுள்ளது. இப்போட்டி இங்கிலாந்தின் சவுதாம்ப்டன் மைதானத்தில் ஜூன் 18 முதல் 22 ஆம் தேதி வரை இந்த போட்டி நடைபெறவுள்ளது.
இந்நிலையில் டெஸ்ட் போட்டிகளில் 400 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்துள்ள அஸ்வின், பல்வேறு சாதனைகளையும் படைத்து வருகிறார். இதனால், டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியிலும் அவர் பட்டையைக் கிளப்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல, டெஸ்ட் கிரிக்கெட்டில், தவிர்க்க முடியாத உயரத்திற்கு சென்றடைவார் என்றும் பல முன்னாள் வீரர்கள் அஸ்வினை புகழ்ந்து வருகின்றனர்.
ஆனால், கிரிக்கெட் வர்ணனையாளர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர், அஸ்வினை ஆல் டைம் கிரேட் பவுலர் என பல முன்னாள் வீரர்கள் கூறுவதை நான் ஒருபோதும் ஏற்கமாட்டேன் என்றும், சேனா நாடுகளில் அஸ்வின் ஒருமுறை கூட ஐந்து விக்கெட்டுகள் எடுத்ததில்லை என்றும், அப்படி இருக்கும் போது அவரை எப்படி எல்லா காலத்திலும் சிறந்த வீரராக என்னால் கருத முடியும் என்றும் தெரிவித்திருந்தார்.
மஞ்சரேக்கரின் கருத்துடன் தினேஷ் கார்த்திக், அபினவ் முகுந்த் ஆகிய தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் முரண்பட்டனர். மஞ்சரேக்கரின் கருத்துக்கு அஸ்வினும் கூட நக்கலாக பதிலடியும் கொடுத்திருந்தார்.
இந்நிலையில், இதுகுறித்து பேசிய வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கர்ட்லி அம்ப்ரோஸ், “நம் அனைவருக்குமே வெவ்வேறு கருத்துகள் இருக்கும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு செயல்திறனை மதிப்பிடுவார்கள். சஞ்சய் மஞ்சரேக்கர் அவர் ஆடிய காலத்தில் சிறந்த வீரர். அவருக்கென்று தனி பார்வை இருக்கும். ஆனால் செயல்திறனை எப்படி வரையறுக்கிறோம் என்பது தான் கேள்வி.
சில நேரங்களில் அதை எளிதாக எடுத்துக்கொள்வோம். என்னை பொறுத்தமட்டில், பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் எந்த வீரருமே தலைசிறந்த வீரர் தான்” என்று தெரிவித்துள்ளார்.