ரவிச்சந்திரன் அஸ்வின் சாதனையை முறியடித்த ஆண்ட்ரே ரஸல்!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பிரியான்ஷ் ஆர்யா மற்றும் பிரப்ஷிம்ரன் சிங் இணை அபாரமான தொடக்கத்தைக் கொடுத்ததுடன் முதல் விக்கெட்டிற்கு 120 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். இதில் இருவரும் அரைசதம் கடந்த நிலையில் அதிரடியாக விளையாடி வந்த பிரியான்ஷ் ஆர்யா 8 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் என 69 ரன்களிலும், பிரப்ஷிம்ரன் சிங் 6 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் என 83 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர்.
அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்களில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 25 ரன்களையும், ஜோஷ் இங்கிலிஸ் 11 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்களைச் சேர்த்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தரப்பில் வைபவ் அரோரா 2 விக்கெட்டுகளை கைப்பற்றிய நிலையில், வருண் சக்ரவர்த்தி மற்றும் ஆண்ட்ரே ரஸல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
அதன்பின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இலக்கை நோக்கி விளையாடிய நிலையில் மழை குறுக்கீடின் காரணமாக ஆட்டம் தடைபட்டது. பின்னர் தொடர் மழை காரணமாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான இந்த போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்படுவதாக ஐபிஎல் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இப்போட்டியின் மூலம் கேகேஆர் அணியின் நட்சத்திர வீரர் ஆண்ட்ரே ரஸல் சிறப்பு சாதனை ஒன்றையும் படைத்துள்ளார். அதன்படி இப்போட்டியில் ஆண்ட்ரே ரஸல் தனது முதல் ஓவரிலேயே பிரியான்ஷ் ஆர்யாவின் விக்கெட்டை கைப்பற்றியதன் மூலம், ஐபிஎல் தொடர் வரலாற்றில் முதல் ஓவரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரர் எனும் ரவிச்சந்திரன் அஸ்வினின் சாதனையை முறியடித்துள்ளார்.
முன்னதாக ரவிச்சந்திரன் அஸ்வின் 45 முறை முதல் ஓவரிலேயே விக்கெட்டை வீழ்த்திய நிலையில், தற்போது ஆண்ட்ரே ரஸல் 46 முறை விக்கெட்டை கைப்பற்றி அவரின் சாதனையை முறியடித்து அசத்தியுள்ளார். அதேசமயம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் முதல் ஓவரிலேயே அதிக விக்கெட்டை வீழ்த்திய வீரர் எனும் சாதனை பியூஷ் சாவ்லா பெயரில் உள்ளது. அவர் இதுவரை 48 முறை முதல் ஓவரில் விக்கெட்டை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: LIVE Cricket Score
ஐபிஎல் தொடரில் முதல் ஓவரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள்
- 48 முறை - பியூஷ் சாவ்லா
- 46 முறை* - ஆண்ட்ரே ரஸ்ஸல்
- 45 முறை - ரவிச்சந்திரன் அஸ்வின்
- 44 முறை - யுஸ்வேந்திர சாஹல்
- 38 முறை - டுவைன் பிராவோ